மம்தாவுக்கு ஷாக் கொடுக்கும் மேற்கு வங்கம்.. பட்டைய கிளப்பும் பாஜக.! ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக 27 தொகுதிகள் வரை கைப்பற்றும் என ஏபிபி- சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 தொகுதிகளை மட்டுமே வெல்லும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது.

மேற்குவங்க மாநிலத்தைப் பொறுத்தவரை மும்முனை போட்டியே நிலவியது. தி.காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதேபோல பாஜகவும் தனித்து போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் சிபிஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ் கட்சி, சிபிஐ ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதில் சிபிஎம் 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
கடந்த இரண்டு தேர்தல்களில் தனித்து களம் கண்டதைப் போலவே இந்த முறையும் திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் தனித்தே போட்டியிட்டன. இந்த நிலையில் தற்போதைய ஏபிபி - சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை வெல்லும் எனவும், திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி ஒன்று முதல் மூன்று இடங்களில் மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் 42 தொகுதிகளில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 43 சதவீத வாக்குகளை பெற்று 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 40 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 18 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
2021 சட்டசபை தேர்தலில் 290 தொகுதிகளில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் 48 சதவீத வாக்குகளுடன் 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என மம்தா பானர்ஜி எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கருத்து கணிப்பு முடிவுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கட்சி பாஜக விட மிகக் குறைவான இடங்களையே கைப்பற்றும் என ஏபிபி - சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications