'நீங்க ஒதுங்குங்க..' காங்.-க்கு மம்தா அனுப்பும் மெசேஜ்.. தேசிய அளவில் உருவாகும் திரிணாமுல் vs பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுலின் பத்திரிக்கையான ஜாகோ பங்களாவில் காங்கிரசுக்கு முக்கிய மெசேஜ் ஒன்றை அளித்துள்ளார். அதில் தேசிய அளவில் பாஜகவை காங்கிரசால் வீழ்த்த முடியவில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 8 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது.
அதற்கு ஏற்றார் போலப் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் செய்தார். மற்ற மூத்த அமைச்சர்களும் கூட மேற்கு வங்கத்திலேயே முகாமிட்டனர். இருப்பினும் கூட, திரிணாமுல் காங்கிரஸை பாஜகவால் வீழ்த்த முடியவில்லை

மாபெரும் கூட்டணி
தொடர்ந்து 3ஆவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி 3ஆவது முறையாக முதல்வர் பதவி ஏற்றார். முதல்வர் பதவியேற்ற கையோடு, வரும் 2024 மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கினார். இதற்காக டெல்லி சென்ற அவர், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர்கள் வீட்டிலேயே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Delhi Calling
இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸின் செய்தித்தாளான ஜாகோ பங்களாவில் காங்கிரசுக்கு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளார். அதில் Delhi Calling என்ற கட்டுரையில், தேசிய அளவில் பாஜகவைக் காங்கிரஸால் தோற்கடிக்க முடிவதில்லை என மம்தா கூறியுள்ளார். மேலும், மம்தா அந்த கட்டுரையில், "2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளக் காங்கிரஸ் இல்லாமல் ஒரு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க முடியாது. மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வெற்றிகரமாகத் தோற்கடித்ததன் மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் முகமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது.

காங்கிரசால் முடியாது
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் நலன் கருதி நாம் ஒன்றுபட வேண்டும். அரசியலைப் போலவே மாற்றுத் தளங்களையும் வலுப்படுத்த வேண்டும். அந்த தளம் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கும். காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து யோசிக்கக் கூட முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் தவறிவிட்டது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் இதைத் தான் காட்டுகின்றன" என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக vs திரிணாமுல்
மேலும், மம்தா பானர்ஜி நேரடியாகச் சொல்லாமல் பாஜகவை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இப்போது திரிணாமுல் காங்கிரசுக்கே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, பபானிபூர் இடைத்தேர்தலிலும் திரிணாமுல் வென்று பிறகு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து மம்தா அந்த கட்டுரையில் மேலும் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் தனது தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் விருப்பம்
இப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன் ஒரு புதிய சவால் உள்ளது. அது டெல்லிக்கான அறைகூவல். தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாசிச சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிலிருந்து தப்ப விரும்புகிறார்கள், திரிணாமுல் காங்கிரசுடன் புதிய இந்தியா குறித்த கனவை மக்கள் காண்கிறார்கள். மேற்கு வங்கத்தைக் கடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன.

புதிய இந்தியாவுக்கான போராட்டம்
புதிய இந்தியாவுக்கான போராட்டத்தை வங்காளம் வழிநடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் நாங்கள் மக்களின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறோம். நாங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்க வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் கடந்த சில வாரங்களாகவே தேசிய அளவில் தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். தேசிய அளவில் பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்டமைப்பை உருவாக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருவதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications