‛பலே’ தாமரை.. நாகலாந்தில் தேர்தலுக்கு முன்பே வென்ற பாஜக வேட்பாளர்..விழிக்கும் காங்கிரஸ்! எப்படி? ஆஹா
நாகலாந்து மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஹிமா: நாகலாந்தில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவுக்கு முன்பே அங்குள்ள அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான். இதனால் காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது. அங்கு நடந்தது என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
நாகலாந்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். தற்போது அங்கு பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்டிபிஎப்-பாஜக கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று நாகலாந்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

பாஜக வேட்பாளர் வெற்றி
நாகலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாகலாந்தில் அகுலுடோ சட்டசபை தொகுதியில் தான் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதயில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக கெகஷே சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இங்கு பாஜக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான கசெட்டோ கிமினி மீண்டும் களமிறங்கி இருந்தார்.

என்ன காரணம்?
இந்த தொகுதியில் இவர்கள் 2 பேர் மட்டுமே போட்டியிட்டு இருந்தனர். இந்நிலையில் தான் பிப்ரவரி 10ல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக கெகஷே சுமி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இதனால் பாஜக வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனை முறைப்படி தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார். இதன்மூலம் தேர்தலுக்கு முன்பே நாகலாந்தில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்பு நடந்தது என்ன?
வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெறுவது என்பது முதல் முறையல்ல. பல இடங்களில் இது நடக்கும். அதேபோல் நாகலாந்து சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ போட்டியின்றி வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வடக்கு அங்காமி II தொகுதியில் என்பிஎப் வேட்பாளரான சுப்புவோ அங்காமி கடைசி நாளில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் தற்போதைய முதல்வர் நைபியு ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகலாந்தில் விறுவிறுப்பு
நாகலாந்தில் மொத்தம் 13 லட்சத்து 17 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 489 பேர் ஆண்களாகவும், 6 லட்சத்து 56 ஆயிரத்து 143 பேர் பெண் வாக்காளர்களாவும் உள்ளனர். ஒரு தொகுதியில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 12,97,399 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இதில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 523 பேர் ஆண் வாக்காளர்களாகவும், 6 லட்சத்து 49 ஆயிரத்து 876 பேர் பெண் வாக்காளர்களாகவும் உள்ளனர். மொத்தம் 2,291 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று விறுவிறுப்பாக ஓட்டளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications