மாமியார் இந்திரா காந்தி சாதித்ததை மருமகள் சோனியா காந்தியால் சாதிக்க முடியுமா?
-ஆர் மணி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது அன்பு மகனும் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இது என்ன வழக்கு என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ...
1938 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்த போது ஜவாஹர்லால் நேருவால் துவங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு எனும் ஆங்கில நாளிதழ். விடுதலைப் போரில் ஏக இந்தியாவும் வீறு கொண்டு எழுந்திருந்த காலகட்டத்தில் படித்தவர்கள் மத்தியில் இந்திய விடுதலையின் தேவையை கொண்டு சேர்ப்பதற்காகவும், அவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு.
70 ஆண்டுகள் வெளிவந்த நேஷனல் ஹெரால்டு 2008 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியுடன் தனது பதிப்பை நிறுத்திக் கொள்ளுவதாக முறைப்படி அறிவித்து விட்டது. கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்த நேஷனல் ஹெரால்டை இனிமேலும் நடத்துவது சாத்தியமில்லை என்ற நிலை வந்ததால் இந்த முடிவு எடுக்கப் பட்டது. அப்போது மத்தியில் மன்மோஹன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம்தான் பதவியில் இருந்தது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டை நடத்திக் கொண்டிருந்த நிறுவனம்தான் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜெல்). இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பத்திரிகையை தொடர்வதற்காக காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாயை கடனாக ஒரு கட்டத்தில் கொடுத்திருக்கிறது. மற்றோர் நிறுவனம் யங் இந்தியா லிமிடெட் (ஒய்ஐல்). இந்த ஒய்ல் நிறுவனம் திடிரென்று எஜெல் நிறுவனத்திற்கு 50 லட்சம் கொடுத்து பின்னதன் அனைத்து சொத்துக்களையும், தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளுகிறது. காரணம் காங்கிரசிடமிருந்து ஏஜெல் நிறுவனம் வாங்கிய 50 லட்சத்தை திரும்பத் தராததுதான்.
இங்குதான் சிக்கலே வருகிறது. 50 லட்சம் ரூபாயை காங்கிரஸ் கட்சி ஒரு நிறுவனத்துக்கு முறையான சட்டவிதிகளைப் பின் பற்றாமல் கொடுக்க முடியாதென்று கூறி டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 2012 லேயே - அப்போது மன்மோஹன் சிங் அரசுதான் பதவியில் இருந்தது - டெல்லி நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகாரைத் தாக்கல் செய்கிறார். சுவாமியின் புகாரில் வலு அதிகமாகவே இருக்கிறது. காரணம் ஒய்ஐஎல் நிறுவனத்தில் 76 சதவிகித பங்குகள் சோனியா மற்றும் ராகுல் வசமுள்ளன. மீதமுள்ள பங்குகள் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்ட நான்கு பேரிடமுள்ளன. ஏஜெல் நிறுவனத்திலும் காங்கிரசைச் சேர்ந்தவர்களே பிரதான பங்குகளை வைத்துள்ளனர். வெறும் 50 லட்சம் ரூபாயை கொடுத்து ஒய்ஐஎல் நிறுவனம், ஏஜெல் நிறுவனத்த்குச் சொந்தமான சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2,000 கோடி ரூபாய்!
ஏஜெல் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை காங்கிரசிடமிருந்து கடனாக வாங்கியதே, அதனை வைத்து இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் பத்திரிகையை ஆரம்பித்ததா என்றால் அதுவும் இல்லை.

2012 ல் இது பற்றி கருத்துக் கேட்ட போது, காங்கிரஸ் தலைவர்கள் ஆணவமாக சொன்ன பதில், புகார் சொல்லுபவர்கள் அதனை ஆதாரத்துடன் நீதி மன்றத்தில் நிருபிக்கட்டும் என்பதுதான். இரண்டாண்டுகள் அமைதி காத்த டெல்லி நீதிமன்றம் 2014 மே மாதம் மோடி அரசு வந்தவுடன் இந்த வழக்கில் வேகம் காட்டத் தொடங்கியது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நேரில் ஆஜராகும்படி சோனியா, ராகுல் உள்ளிட்ட ஆறுபேருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் டெல்லி உயர்நீதி மன்றம் இந்த சம்மனுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடை நீக்கப் பட்டு டிசம்பர்19 ம் தேதி - அதாவது இன்று - ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. 19 ம் தேதி தாங்கள் நேரில் ஆஜராகப் போவதாக சோனியா, ராகுல் உள்ளிட்டோரும் கூறி விட்டனர். தாங்கள் உச்சநீதி மன்றத்தை அணுகப் போவதில்லை என்று கூறி இருவரும் சொன்னபடி இன்று ஆஜராகியும் விட்டனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறார் ராகுல் காந்தி. ‘நான் இந்திரா காந்தியின் மருமகள், இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்' என்று நாடாளுமன்றத்தில் வீர வசனம் பேசுகிறார் சோனியா காந்தி.
தான் கைதாகப் போகும் சூழல் உள்ளதை உணர்ந்து இந்த வசனத்தை சோனியா கூறுகிறார். 19 ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகும் போது நீதிபதி நினைத்தால் ஆஜராகும் அனைவரையும் சிறைக்கு அனுப்ப முடியும். ஏற்கனவே தான் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும், சோனியா மற்றும் மோதிலால் வோரா ஆகிய இருவருக்கும் மட்டும் ஜாமீன் மனுக்களை தயார் செய்யும் படி ராகுல் காந்தி, தனது வழக்கறிஞரான, அபிஷேக் சிங்வியிடம் தெரிவித்து விட்டார்.
இந்த விவகாரத்தில் மோடிக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இது முழுக்க, முழுக்க நீதிமன்றத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள விஷயம் என்று மோடி அரசு கூறுகிறது. குறிப்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இதில் தனக்கோ, தனது அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்கிறார். இந்த விவகாரத்தை கையாளும் அமலாக்கப் பிரிவு ஜெட்லியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் இதுதான் அவரது ஒரே பதிலாக இருக்கிறது.
தன்னை இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு தியாகியாக முயற்சிக்கும் சோனியா காந்தியின் அணுகுமுறைதான் நகைப்புக்குரியதாக இருக்கிறது. அடிப்படையில் ஒரு நிதி மோசடி சம்மந்தப்பட்ட, ஊழல் வழக்கு இது. இந்திரா காந்தி 1997 மற்றும் 1978 ம் ஆண்டுகளில் அப்போதைய மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசாங்கத்தால் கைதானதை ஒப்பிட்டுப் பேசுகிறார் சோனியா.
அந்த நிலைமையே வேறு... 1977 ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய மொரார்ஜி தேசாய் அரசு இந்திரா காந்தியைப் பழி வாங்கத் துடித்தது உண்மை. ஒரு பக்கம் ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மற்றோர் பக்கம் ஊழல் வழக்கில் இந்திரா காந்தியைக் கைது செய்ய முடிவு செய்த தேசாய் அரசு, 1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி 104 ஜீப்புகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்புமாறு இரண்டு நிறுவனங்களை நிர்ப்பந்தப் படுத்தியதாகவும், ஒரு எண்ணெய் டிரில்லிங் ஒப்பந்தத்தை விலை குறைவாக சொல்லப் பட்டிருந்தாலும், அமெரிக்க நிறுவனத்துக்கு மாறாக ஃபிரெஞ்ச் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் கூறி இந்திரா காந்தியைக் கைது செய்தது.
இந்திரா காந்தியை அக்டோபர் 3 ம் தேதி மாலையில் சிபிஐ டெல்லியில் கைது செய்தது. ஆனால் அடுத்த நாளே நீதிமன்றம் இந்திரா காந்தியை விடுதலை செய்து விட்டது. கைது நடவடிக்கையை ஹரியானாவில் தான் செய்ய முடியும், டெல்லியில் செய்ய முடியாதென்ற காரணத்தால் (தொழில்நுட்ப காரணம்) இந்திரா காந்தி விடுதலையானார்.
இதே போல 1978 ம் ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற ஊழியர்களை மிரட்டினார் என்ற காரணத்தால், உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டு இந்திரா காந்தியை உரிமை மீறல் குழு ஒரு வார காலம் திஹார் சிறையில் அடைத்தது. இந்திரா காந்தியின் எம் பி பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஒரே ஆண்டில் மொரார்ஜி தேசாய் அரசை இந்திரா காந்தி கவிழ்த்தார். 1980ல், அதாவது, ஆட்சியை இழந்த இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் இந்திய பிரதமாரானார் இந்திரா காந்தி.
அந்த இந்திரா காந்தியுடன் இன்றையை சோனியா காந்தியை ஒப்பிட முடியுமா என்பதுதான் கேள்வி.
‘இந்திரா காந்தி சர்வாதிகார மனப்பாங்குடன் நடந்து கொண்ட ஒரு தலைவர்தான். ஆனால் அவர் நிச்சயமாக ஊழல் பேர்வழி அல்ல. மொரார்ஜி தேசாய் அரசு அற்பத்தனமான, பழி வாங்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால்தான் இரண்டரை ஆண்டு கால இடைவெளியிலேயே மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா. ஆனால் தற்போது சோனியா காந்தி மாட்டிக் கொண்டிருப்பது பூர்வாங்க ஆதாரமுள்ள ஊழல் வழக்கில்' என்று கூறுகிறார் 1977 ம் ஆண்டு நிகழ்வுகளின் போது செய்தி சேகரித்த டெல்லி மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தாலே நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகராத்தில் சோனியா மற்றும் ராகுல் மீதான குற்றச் சாட்டில் உண்மை இருப்பது தெரிகிறது. இதில் உச்ச நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் சொல்லுவது முக்கியமான ஒரு கருத்தாகும்.
‘1938 ம் ஆண்டிலிருந்து 2008 ம் ஆண்டு வரையில் நேரு குடும்பத்தைச் சார்ந்த எவரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் நிறுவனங்கில் பங்குதாரராக இருந்தது கிடையாது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி என்று யாரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிருவாகத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் இயக்குநராக இருந்தது கிடையாது. முதன் முறையாக 2008 ல் சோனியாவும், ராகுலும் நேஷனல் ஹெலால்டு பத்திரிகையின் கட்டுப்பாட்டை பின்பக்க கதவின் வழியாக எடுத்துக் கொண்டனர்' என்கிறார் பிரஷாந்த் பூஷண்.
தனது பாட்டனாரும் சுதந்திர போராட்ட காலத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் ஒரு பங்குதாரராக இருந்தார் என்று நினைவு கூர்கிறார் பிரஷாந்த் பூஷண்.
நிதி முறைகேட்டு ஊழல் வழக்கில் வசமாக மாட்டிக் கொண்டிருக்கும் சோனியா காந்தியும், ராகும் காந்தியும், 2000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சித்த விவகாரம்தான் நேஷனல் ஹெரால்டு விவகாரம் என்பதை நம்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
19 ம் தேதி ஒருவேளை சோனியாவும், ராகுலும் மற்றும் நான்கு பேரும் சிறைக்கு போகப் போகிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அம்மா மற்றும் மகனில் எவராவது ஒருவர் சிறைக்குப் போனாலும் விவகாரத்தை தெருக்களுக்கு கொண்டு வர காங்கிரஸ் இப்போதே முடிவு செய்து விட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கும் தாக்கீதில் அன்றைய தினம் குறைந்தது 2,000 காங்கிரஸ் தொண்டர்களை தெருக்களில் இறக்கி மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் மன்றத்தில் தோலுக்க வேண்டும் என்று கூறுகிறது.
இது எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறதென்று தெரியவில்லை. மேலும் ஒய்ஐஎல் நிறுவனம் ஒரு லாப நோக்கமுள்ள நிறுவனம் அல்ல என்றும் ஆகவே இதில் ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லையென்றும் கூறுகிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், சோனியா குடும்பத்தின் சட்ட ஆலோசகருமான ப.சிதம்பரம்.
ஆனால் டெல்லி கீழமை நீதிமன்றத்தின் நீதிபதி இதனை செவி மடுக்கத் தயாராக இல்லை என்பதுதான் சோனியா, ராகுல் மற்றும் நால்வருக்கு சம்மன் அனுப்ப பட்டதன் சாராம்சம்.
1977 மற்றும் 1978 ம் ஆண்டுகளில் இந்திரா காந்தி சாதித்ததை 2015 ல் சாதிக்கத் துடிக்கும் சோனியா காந்தி, அடிப்படையில் இரண்டு விஷயங்களை கவனிக்கத் தவறுகிறார் என்றுதான் தோன்றுகிறது. முதலாவது, இந்திரா காந்தி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் பூர்வாங்க ஆதாரம் கிடையாது. ஆனால் சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டுக்களில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதற்கான சாட்சியம் இரண்டு நீதிமன்றங்கள் - டெல்லி கீழமை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் - ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது - இரண்டாவது, 1978 ல் காங்கிரஸூக்கு இருந்த மக்கள் ஆதரவு இப்போது கண்டிப்பாக இல்லையென்பது.
இந்திரா காந்தியால் மக்களின் மனங்களில் தான் பழிவாங்கப் படுகிறோம் என்ற உணர்வை நன்றாக விதைக்க முடிந்தது. ஆனால் இன்று சோனியாவால் அதனை சாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. மோடி அரசு மிகப் பெரிய தவறு எதையும் செய்யாத வரையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு மாமியார் சாதித்ததை இன்று மருமகள் சாதிக்க வாய்ப்புகள் குறைவென்பதே கள யதார்த்தம்!
இக்கட்டுரை பிரசுரமாகும்போது வந்த தகவல்: இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நிபந்தனையற்ற, ஆனால் ரூ 50000 சொந்த பிணையில் ஜாமீன் வழங்கியுள்ளது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications