நிதிஷ் உருளை கிழங்கு மாதிரி! எந்த கட்சி வென்றாலும் அவர்தான் முதல்வர்! உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பீகாரில் தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் பலம் என்னவென்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் விளக்கமளிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பீகாரில் எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும் நிதிஷ் குமாரே முதல்வராக இருப்பார் என பிரசாந்த் கிஷோர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், எல்லாக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இப்போது பீகாரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் பாஜக- ஜேடியு கூட்டணி போட்டியிடுகிறது. ஆட்சியைத் தக்கவைக்க அவர்கள் தீவிரமாக முயல்கிறார்கள்.

பீகார் தேர்தல்
இன்னொரு பக்கம் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது. கடந்த முறையே வெறும் சில தொகுதிகளில் வெற்றியை கையைவிட்டுப் போன நிலையில், மீண்டும் அதுபோல நடக்கக்கூடாது என்பதில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது. இதுபோல மாஜி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கட்சியும் பீகாரில் களமிறங்குகிறது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கா தேர்தல் களத்தில் உதவியிருக்கிறார். இப்போது அவரே தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுகிறார். அவரது ஜன் சூராஜ் கட்சி பீகாரில் என்ன செய்யப் போகிறது என்பதே இப்போது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் சொல்வது என்ன!
இதற்கிடையே பீகார் அரசியல் தொடர்பாக, குறிப்பாக நிதிஷ் குமாரின் பலம் என்ன என்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசும் பழைய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் வலிமையான தலைவராக இல்லாத போதிலும், நிதிஷ் குமார் எப்படித் தொடர்ந்து பீகார் முதல்வராக இருக்கிறார் என்பதை விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நிதிஷ்குமார் பலம் என்றால் ஒன்றைச் சொல்லலாம்.. அவர் ஒரு உருளைக் கிழங்கு மாதிரி.. உருளைக் கிழங்கு இல்லாமல் சமைப்பது கடினம். அதுபோலத் தான் அவர் இல்லாமல் பீகாரில் ஆட்சியை அமைக்க முடியாது. பீகாரில் மக்கள் யாருக்காக வாக்களித்தாலும் நிதிஷ் குமார் தான் முதல்வராகப் பதவியேற்பார். மக்கள் காங்கிரஸ், பாஜக, ஆர்ஜேடி, ஜேடியு என எதற்கு வாக்களித்தாலும்.. கடைசியில் நிதிஷ்குமார் தான் முதல்வராவார். இதுதான் அவரது பலம்!
எது பலம்?
நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோரை போலத் தான் நிதிஷ்குமார். இந்தத் தலைவர்கள் மீது பல தவறுகள் இருந்தாலும் அவர்களுக்கு என ஒரு சாப்ட் இமேஜ் இருக்கிறது. அவர்கள் வலிமையான தலைவர்களைப் போல இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் சாப்ட் இமேஜ் தான் அவர்களின் வலிமையாக மாறும். எல்லாக் கட்சிகளையும் அரவணைக்க அந்த சாப்ட் இமேஜ் முக்கியம்... கூட்டணி ஆட்சி என வரும்போது, சரி அவர் எந்தப் பிரச்சனையையும் செய்ய மாட்டார்.. அவரே ஓகே என்று அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, அவரை முதல்வராக்க அந்த சாப்ட் இமேஜ் முக்கியமானதாக இருக்கிறது" என்றார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் ஜன சூராஜ் கட்சியை ஆரம்பிக்கும் முன்பு நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியில் தான் இருந்தார். கடந்த 2018ல் ஜேடியு கட்சியில் இணைந்த அவருக்குத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஜேடியு கட்சியில் இருந்தபடியே அவர் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும், கருத்து வேறுபாடு காரணமாக 2020 பீகார் சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியில் இருந்து விலகினார்.
இந்தச் சூழலில் தான் 5 ஆண்டுகள் கழித்து அவர் தனது ஜன சூராஜ் கட்சி மூலம் பீகாரில் உள்ள எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். பீகார் மாநிலத்திற்குத் தங்களால் மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் எனச் சொல்லி அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பீகார் தேர்தலில் என்ன சாதிக்கப் போகிறார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications