ரஷ்யாவில் நடந்த மீட்டிங்.. எந்த பலனும் இல்லை.. படைகளை வாபஸ் வாங்காத சீனா.. லடாக்கில் பதற்றம்!
லடாக்: லடாக் பிரச்சனை தொடர்பாக நேற்று இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்த பின்பும் கூட எல்லையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை இருந்த நிலையே எல்லையில் தொடர்ந்து வருகிறது.
இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் எல்லையில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. நேற்று ரஷ்யாவில் நடந்த மீட்டிங்கிற்கு பின் எல்லையில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்ய மீட்டிங் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நேற்று ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே ஆலோசனை நடந்தது. இதில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும், இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

என்ன உடன்படிக்கை
இந்த ஆலோசனையில் 5 முக்கிய உடன்படிக்கைகள் செய்யப்பட்டது. எல்லையில் அமைதியை எப்படி கொண்டு வருவது, அத்துமீறல் நிகழ்ந்தால் எப்படி சமாளிப்பது, பழைய ஒப்பந்தங்களை எப்படி மதிப்பது என்று உடன்படிக்கை போடப்பட்டது. ஆனால் எங்கும் படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக இரண்டு நாட்டு தரப்பு உடன்படிக்கை மேற்கொள்ளவில்லை. அதாவது இத்தனை கிலோ மீட்டர் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இரண்டு நாட்டு தரப்பு எந்த விதமான உடன்படிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சீனா ஆர்வம்
எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதில் சீனா ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள். எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவது குறித்த கேள்வி எதற்கும் சீனா பதில் அளிக்கவில்லை. இதனால் லடாக்கில் தற்போது இரண்டு தரப்பும் படைகளை வாபஸ் வாங்கவில்லை. நேற்று ரஷ்யாவில் மீட்டிங் நடந்த நிலையில், தற்போது லடாக்கில் அதே நிலைமை நீடித்து வருகிறது.

எத்தனை பேப்பர்
இரண்டு தரப்பும் எல்லையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்து உள்ளது. இவர்களில் யாரும் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பின்வாங்கவில்லை. சீனா முதலில் பின்வாங்க வேண்டும். சீனா எல்லையில் படைகளை வாபஸ் வாங்கினால் இந்தியாவும் வாங்க தயார் என்று கூறியுள்ளது. இதனால் லடாக்கில் இப்போது எந்த விதமான மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் இல்லை
முன்னதாக கடந்த ஜூலை 6ம் தேதி லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை நடந்த மறுநாளே லடாக்கில் சீனா படைகளை 2 கிமீ வாபஸ் வாங்கியது. ஆனால் நேற்று ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் அப்படி மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது
அதேபோல் கடந்த வாரம் ரஷ்யாவில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை தோல்வி அடைந்தது. வரிசையாக பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வி அடைந்த நிலையில் நேற்று நடந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான மீட்டிங் கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது.. ஆனால் அதிலும் தற்போது பெரிய அளவில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications