''எனது அரசுக்கு தேனிலவு காலம் என்ற ஒன்று இல்லை'': மோடியின் 30 நாள் அனுபவங்கள்!
டெல்லி: ஊடக நண்பர்கள் கூறுவது போல, தேனிலவு காலம் என்ற ஒன்று எனது அரசுக்கு கிடையாது. இன்னும் சில துறைகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. மத்தியில் புதிய ஆட்சி அமைந்து நேற்றோடு சரியாக ஒரு மாதகாலம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஒரு மாத கால ஆட்சியில் தனது செயல்பாடுகள் குறித்து தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அதில் அவர் கூறியுள்ளதாவது:-

தேனிலவு காலம்...
புதிய அரசுகளுக்கு ஒரு சவுகரியம் உண்டு. ஊடக நண்பர்கள் அதை ‘தேனிலவு காலம்' என்று வர்ணிப்பார்கள். சில அரசுகள், அந்த காலத்தை 100 நாட்களும், அதற்கு மேலும் கூட நீட்டிப்பார்கள்.

குற்றச்சாட்டுகள்...
ஆனால், எனக்கு தேனிலவு காலமே கிடையாது. 100 நாட்களைவிடுங்கள். பதவி ஏற்ற 100 மணி நேரத்துக்கு முன்பே, வரிசையாக குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கி விட்டன. அவற்றில் சில இந்த அரசுக்கு சம்பந்தம் இல்லாதவை. இருந்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சேவை ஒன்றே குறிக்கோள்...
இருப்பினும், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றுபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. அந்தவகையில்தான் நான் பணியாற்றுகிறேன். அதனால் எனக்கு திருப்தியாக இருக்கிறது.

தவறான கணிப்பு...
நான் ஒரு மாதத்துக்கு முன்பு பதவி ஏற்றபோது, இந்த இடத்துக்கு நான் புதிது என்று எண்ணினேன். மத்திய அரசு செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளவே எனக்கு ஒரு வருடம், ஏன் இரண்டு வருடம் கூட ஆகும் என்று சிலர் கருதினர். ஆனால், ஒரு மாதம் ஆகும் நிலையில், அந்த எண்ணமே எனக்கு இல்லை.

எங்கள் நோக்கம்...
டெல்லியில் எனக்குள்ள பெரிய சவாலே, நாட்டில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் எங்களின் நோக்கம் மற்றும் உண்மைத்தன்மையை குறிப்பிட்ட சிலருக்கு புரிய வைப்பதுதான். இந்த நபர்கள், அரசுக்கு உள்ளேயும் இருக்கிறார்கள், வெளியேயும் இருக்கிறார்கள்.

ஒப்பிடக் கூடாது...
கடந்த கால அரசுகள் ஆட்சி செய்த 67 ஆண்டுகளையும், இந்த ஒரு மாதத்தையும் ஒப்பிடக்கூடாது. ஆனால், கடந்த ஒரு மாதமாக, எனது குழுவினர், ஒவ்வொரு தருணத்தையும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்துள்ளனர்.

தேச நலன்...
எனது அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தேச நலனை கருத்தில்கொண்டே எடுக்கப்படுகிறது. இருப்பினும், சில பிரச்சினைகளில், நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

நிலைமை மாறும்...
சரியான விஷயங்களை சரியான நபர்களிடம் சரியான நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அமைப்பு முறைகளை வலுப்படுத்துவது அவசியம். அதன்பிறகு நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.

மக்கள் ஆதரவு...
மக்களின் ஆதரவும், பாசப்பிணைப்பும் அபரிமிதமாக இருக்கிறது. அது எங்களை இன்னும் கடுமையாக பணியாற்ற தூண்டுகிறது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர்களின் சந்திப்பு...
கடந்த ஒரு மாதத்தில், எத்தனையோ முதல்வர்கள் என்னைச் சந்தித்தனர். அவர்களுடன் நெருங்கி பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். சில நாட்களாக, மத்திய அமைச்சர்கல், அதிகாரிகளுடன் நான் நடத்திய ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது. சிந்தனை பரிமாற்றத்துக்கு வாய்ப்பாக அமைந்தது. சில அமைச்சகங்களுக்கு கருத்துருக்களை உருவாக்கி உள்ளோம்.

இந்தியாவின் முன்னேற்றம்...
நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவை மாபெரும் உயரத்துக்கு இட்டுச் செல்லுவோம். மக்களின் அன்பு, அதிகாரிகளின் ஆதரவு மற்றும் அமைச்சர்கள் அனுபவம் காரணமாக, எனது நம்பிக்கையின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இருண்டகாலம்...
39 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அது, நமது வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்று. பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரங்கள் பறிக்கப்பட்டன. இந்த சுதந்திரங்கள் இல்லாவிட்டால், ஜனநாயகம் நிலைக்காது. இந்த சுதந்திரங்களை கட்டிக்காக்க உறுதி ஏற்போம். மீண்டும் அத்தகைய கறுப்பு நாட்கள் வராமல் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு நரேந்திர மோடி அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications