இந்த குஜராத் கிராமத்தில் எந்த வீட்டிலும் சமைக்கவே மாட்டாங்க – காரணம் தெரியுமா?
அகமதாபாத்: பரபரப்பான வாழ்க்கை முறையில், வீடுகளில் மூன்று வேளை சமைப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிலும் ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் வந்தப் பிறகு வீடுகளில் சமைப்பது கணிசமாக குறைந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாது ஆனால் இதன் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான கதை உள்ளது.

குஜராத் மாநிலம், மஹிசனா மாவட்டத்தில் சந்தன்கி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள். அங்கு ஒருவரது வீட்டில் கூட சமையல் செய்ய மாட்டார்கள். இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணமல்ல. அதற்கு பாரம்பர்ய பிணைப்பு தான் காரணம். வயது முதிர்ந்த மூத்த குடிகளுக்கு, தனிமை விரக்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முறையை பின்பற்றுகின்றனர்.
முன்பு அந்த சந்தன்கி கிராமத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். இளைஞர்கள் பெரும்பாலும் படித்து முடித்தப் பிறகு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இப்போது பெரும்பாலும் முதியோர்கள் தான் இருக்கிறார்கள். அந்த ஊருக்கு பொதுவாக ஒரு சமூக சமையல் கூடம் உள்ளது. ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தினசரி அங்குதான் சமையல் செய்யப்படுகிறது.
ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் எண்ணத்திலும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நபருக்கு மாதம் ரூ.2,000 செலுத்தினால் போதும். மாதம் ரூ.11,000 ஊதியத்தில் ஒரு சமையல் காரர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் ஆரோக்கியமான மற்றும் பாரம்பர்ய குஜராத்தி வகை உணவுகளை சமைத்துக் கொடுத்துவிடுவார்.
இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு பூனம் பட்டேல் என்பவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் சுமார் 20 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, அவர் சந்தன்கி கிராமத்துக்கு திரும்பியுள்ளார். சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, நாட்டுக்கே முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை தொடங்கியதாக பூனம் கூறுகிறார்.
இதுகுறித்து பூனம் பட்டேல் கூறுகையில், "இந்த சமூக கூடத்தில் தான் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும். மக்கள் அனைவரும் எளிதாக ஒன்று கூடும் இடத்தில் இது அமைந்துள்ளது. சமையல், சாப்பிடுவதுடன் மக்கள் தங்களின் சுக, துக்கங்களை பகிரும் இடமாகவும் இது உள்ளது. இதனால் மக்களுக்குள் நல்ல பிணைப்பு உருவாகியுள்ளது. அங்கு யாருக்கும் தனிமை உணர்வு இருக்காது. எங்களைப் பார்த்து மேலும் பல கிராமங்கள் இந்த முறை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதுடன், அவர்கள் தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இது முதியோரின் உடல்நலனிலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழியை தான் செயல்படுத்தியுள்ளோம்.
எளிமையான இந்தத் திட்டம் ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தனித்துவமான திட்டம் சந்தன்கி மாடலாகவே உருவாகிவிட்டது. இதேபோன்ற முதியோர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அங்கு எல்லாம், இதே முறையை பின்பற்றி தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்." என்றார்.












Click it and Unblock the Notifications