பஹல்காம் தாக்குதல்: திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி பலி.. மனைவி கண் முன் நடந்த கொடூரம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 16 ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மனைவியுடன் ஹனிமூனுக்குச் சென்றபோது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர். மகாராஷ்டிரம், தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 26 வயதான வினய்க்கு பயங்கரவாதிகள் தாக்குதலுக்குள்ளான 5 நாட்களுக்கு முன்புதான் ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு தனது மனைவியுடன் ஹனிமூனுக்காக வந்த இடத்தில் அவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ உடை அணிந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள், இந்துக்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
யார் இந்த வினய் நர்வால்?
ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தில் உள்ள பூஸ்லி கிராமத்தில் பிறந்தவர் வினய் நர்வால். இவருடைய வயது 26. இவர் கொச்சியில் இந்திய கடற்படை அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார். வினயின் தந்தை ராஜேஸ் நர்வால் பானிபட்டில் உள்ள ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
வினய்க்கு ஏப்ரல் 16 ஆம் தேதி கர்னல் மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தான் குடும்பத்தினருடன் கடைசியாக இந்த தம்பதி இருந்துள்ளனர். இதையடுத்து, நர்வாலும் அவரது மனைவியும் பஹல்காம், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலாக செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் பயங்கரவாத தாக்குதலின்போது வினய் நர்வால் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் நர்வாலின் மார்பு, கழுத்து, இடது கையில் குண்டுகள் பாய்ந்துள்ளன. இந்திய கடற்படை அதிகாரி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கர்னல் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வினயின் மரணத்தை உறுதி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications