"கள்ளாட்டம்" ஆடி விட்டார்கள் நடுவர்கள்.. இந்தியாவிடம் கபடிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தானின் அழுகாச்சி
அமிர்தசரஸ்: உலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மயிரிழையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் தங்களது தோல்விக்கு நடுவர்களின் பாரபட்சமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால்தான் தாங்கள் தோல்வி அடைய நேரிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் ஷபீக் சிஸ்டி கூறியுள்ளார்.

அமிர்தசரஸ் நகரில் சனிக்கிழமையன்று உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் 45-42 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று 5வது முறையாக உலக கோப்பையை வென்றது. ஆனால் போட்டி முடிவில் நடுவர்கள் மீது பாகிஸ்தான் கேப்டன் குற்றம் சாட்டினார். மேலும் 2வது இடத்தைப் பெற்றதற்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும் பாகிஸ்தான் அணி எதிர்ப்பு தெரிவித்த பின்னர் பெற்றது.
பாகிஸ்தான் கேப்டன் ஷபீக் கூறுகையில், பாகிஸ்தான் அணி வென்று விடக் கூடாது என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்பட்டுள்ளனர். எங்களை தண்ணீர் குடிக்கக் கூட நடுவர்கள் அனுமதிக்கவில்லை. 3வது நடுவர் எங்களை மிரட்டவும் செய்தார். வேகமாக விளையாடுமாறு நிர்பந்தித்தனர்.
மேலும் ஆட்டத்தையும் வேகமாக முடித்து விட்டனர். இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டனர் என்றார் ஷபீக்.
முன்னதாக, உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு 2 கோடியும், 2வது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ. 1 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி போட்டியின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவைத் தோற்கடித்தது. இதையடுத்து ரசிகர்களைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போது கபடி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான், இந்திய நடுவர்களை குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
