"பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசே காரணம்.. எங்களுக்கு தொடர்பு இல்லை!" பாகிஸ்தான் திமிர் பேச்சு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், இது தொடர்பாக பாகிஸ்தான் இப்போது மவுனம் கலைத்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில காலமாகவே வெளிமாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்து வந்தது. அங்குச் சிறு சிறு தொழில் நடத்தி வந்த வெளிமாநிலத்தவரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். ஆனால், இது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்து வந்தது.

காஷ்மீர் தாக்குதல்
இந்தச் சூழலில் நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்குள்ள பைசரன் மலை பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குக் குதிரைச் சவாரி செய்து கொண்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தனது மவுனத்தைக் கலைத்துள்ளது. இந்தத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மவுனம் கலைத்த பாகிஸ்தான்
மேலும், பயங்கரவாதம் அது எந்த வடிவில் இருந்தாலும் அதை நிச்சயம் பாகிஸ்தான் நிராகரிக்கும் என்றும் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானுக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, மணிப்பூரில் உள்ள பல மாநிலங்களில் அமைதியின்மை நிலவும் சூழலில், மத்திய அரசுக்கு எதிரானவர்களின் எதிர்வினை தான் இந்தத் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு முழுக்க முழுக்க இந்தியாவில் நடந்த சம்பவங்களே காரணம்.
திமிர் பேச்சு
இந்தியாவில் உள்ள மத்திய அரசு நாகாலாந்து, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களை எதிர்கொள்கிறது. இந்திய அரசு பலரைச் சுரண்டி வருவதால் உள்நாட்டுச் சம்பவங்களே இதற்குக் காரணம். நாங்கள் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை.. உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுக்கு இலக்காக இருக்கக்கூடாது.. அதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
என்ஐஏ விசாரணை
இருப்பினும், இது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்தபோது சவுதிக்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த மோடி, உடனடியாக நாடு திரும்பினார். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். அங்கு அவசரக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications