துவங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளுடன் வருவதால் கூட்டத்தொடர், சூடு பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரே பல்வேறு காரணங்களால் முற்றிலும் முடங்கிப் போயிருந்தது. இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறவுள்ள மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதுவாவது முறையாக, ஒழுங்காக நடக்குமா அல்லது மக்களின் வரிப்பணம் மறுபடியும் வீணாகுமா என்பதை அடுத்து வரும் நாட்கள் வெளிப்படுத்தும்.

முத்தலாக், அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட 18 முக்கிய சட்ட மசோதாக்களை அரசு கொண்டு வரவுள்ளது. இதுபோக கடந்த 2014ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் பல்வேறு மசோதாக்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற பாஜ அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் இதை நிறைவேற்ற விடுமா எதிர்க்கட்சிகள் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.
அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டத் தொடரின் முக்கிய ஹைலைட்டே தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம்தான். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு இதுவரை 12 கட்சிகள் (காங்கிரஸ் உள்பட) ஆதரவு தெரிவித்துள்ளன. மற்றவர்களையும் திரட்டும் முயற்சியில் தெலுங்கு தேசமும், காங்கிரஸும் ஈடுபட்டுள்ளன.
மொத்தத்தில் சூடு பறக்கும் கூட்டத் தொடராக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications