எனது வலியைவிட.. மக்கள் வலி பெரியது... வீல்சேரில் அமர்ந்தபடி பேரணியில் மம்தா உருக்கம்
கொல்கத்தா: புருலியா என்ற பகுதியில் வீல்சேரில் அமர்ந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா தனது வலியைவிட மக்களின் வலி பெரியது என்றும் மக்களுக்காகவே திரிணாமுல் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த வருவதாகவும் தெரிவித்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காலில் காயம்
இதற்காகக் கடந்த வாரம் புதன்கிழமை மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென்று காயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பினார். காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சில நாட்கள் அவர் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் பிரசாரம்
இருப்பினும், நேற்றே அவர் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலையில் உள்ள புருலியா என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தனது வலியைவிட மக்களின் வலி அதிகம் என்று பேசினார்.

மக்களின் வலி பெரியது
மேலும், "கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் நான் காயமடைந்தேன். அதில் நான் உயிர் பிழைத்தது எனது அதிர்ஷ்டம். காலில் எனக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப் போட்டுள்ளேன். இதன் காரணமாக என்னால் நடக்க முடியாது. உடைந்த இந்த காலுடன் என்னால் மக்களுக்காகப் போராட முடியாது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அது நடக்காமல் போனது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

பாஜக மீது தாக்கு
தொடர்ந்து பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், "பாஜக பொய்களால் தான் வென்றது. மத்திய பாஜக அரசு எல்லாவற்றையும் விற்கிறார்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கு வளர்ச்சியை அளிக்க முயன்று வருகிறோம். பெட்ரோல், டீசல், கேஸ் அவ்வளவு ஏன் மண்ணெண்ணெய் விலையைக் கூட உயர்த்தி வருகிறது. ஆனால் எங்கள் அரசு தொடர்ந்து மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications