ஒதுக்கியதோ ரூ.2 கோடி.. செலவோ ரூ.12 லட்சம் தான்.. 135 பேர் பலியான குஜராத் பால விபத்தின் ஷாக் தகவல்
காந்திநகர்: குஜராத்தில் புனரமைப்பு பணிக்கு பிறகு திறக்கப்பட்ட மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் கேபிள் பாலம் புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆறு பாய்கிறது. இந்த ஆற்றுக்கு குறுக்காக கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்டது.
142 ஆண்டு வரலாற்று சிறப்பு கொண்ட இந்த கேபிள் பாலத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வந்தனர். இது ஒரு சுற்றுலா தலமாக மாறி இருந்தது.

கேபிள் பால விபத்து - 135 பேர் பலி
இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி கேபிள் பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இதனால் பாலத்தில் நின்ற ஏராளமான மக்கள் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர். பலர் அறுந்த கேபிள் பாலத்தில் தொங்கினர். மேலும் தண்ணீரில் ஏராளமான மக்கள் தத்தளித்தனர். அக்கம்பக்கத்து பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகுகளில் வீரர்கள் மீட்பு பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர். தீவிரமாக நடந்த மீட்பு பணியில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டனர். இருப்பினும் 135 பேர் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திறந்த 4 நாளில் விபத்து
நீண்ட பாரம்பரியமிக்க இந்த பாலம் சமீபத்தில் பழுதடைந்தது. இதையடுத்து 7 மாதங்கள் வரை கேபிள் பாலத்தில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாலத்தை புனரமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. குஜராத் புத்தாண்டு கடந்த மாதம் 26ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் இந்த கேபிள் பாலம் திறக்கப்பட்டது. பிட்னஸ் சான்று வழங்கப்படாத நிலையில் பாலம் திறக்கப்பட்ட 4வது நாளில் தான் இந்த விபத்து நிகழ்ந்து 135 பேர் இறந்துள்ளனர்.

9 பேர் கைது
இதனால் புனரமைப்பு பணி மேற்கொண்ட ஓரேவா நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நிறுவனத்தின் அலட்சியம் தான் 135 பேரின் உயிர்பலிக்கு காரணம் என கூறப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். விபத்து தொடர்பாக ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.12 லட்சம் மட்டுமே செலவு
இதற்கிடையே தான் கைதான ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மோர்பி பாலத்தை பராமரிக்க 15 ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பால பராமரிப்பு மற்றும் பாலத்துக்கான பாதுகாவலர்களும் அடங்குவார்கள். மேலும் ஓரேவா நிறுவனம் சார்பில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் புனரமைப்பு பணி ஒப்படைக்கப்பட்டது. மோர்பி கேபிள் பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.12 லட்சம் மட்டும் செலவிடப்பட்டது. இது ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 6 சதவீதம் மட்டுமே ஆகும்.

கேபிள்கள் மாற்றமில்லை
அதோடு பாலத்தில் எந்த முக்கிய பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பாலத்தில் நடந்து செல்வதற்கான அலுமினியம் பிளேட்டுகள் சில இடங்களில் மாற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு பாலம் துருப்பிடிப்பதை தடுக்கும் வகையிலான பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக கேபிள் பாலத்தின் கேபிள்களை மாற்றப்படவில்லை. இதற்கிடையே தான் குஜராத் புத்தாண்டில் கேபிள் பாலம் திறக்கப்பட்டு விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications