உத்தரபிரதேசம் சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு! வன்முறையால் நீடிக்கும் பதற்றம்! இணைய சேவை துண்டிப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. மசூதி ஆய்வுக்கு எதிராக போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக சம்பல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

அதன்படி இரு தரப்பினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையர் கடந்த 5-ந் தேதி மசூதியில் ஆய்வு நடத்தினார். நீதிமன்ற ஆணையர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது முறையாக நீதிமன்ற ஆணையர் ஆய்வுக்கு சென்ற போது, அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.
சுமார் 30 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த சம்பவத்தால் உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநபர்கள் அந்த பகுதிக்கு வர தடை விதிக்கபட்டுள்ளது. செங்கல், சோடா பாட்டில், வெடிக்க கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications