கேரளாவில் தொடரும் கனமழை... மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை கேரளாவில் குறைந்த அளவே மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கேரளாவின் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கேரளாவின் வட மாவட்டங்களான பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. தலைநகரான திருவனந்தபுரத்திலும் பலத்த மழை பெய்தது.

போக்குவரத்து பாதிப்பு...
கனமழை காரணமாக தம்பானூர், கரமனை, நெடுமங்காடு போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சில இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தது.

மின் இணைப்பு துண்டிப்பு...
இதனால் திருவனந்தபுரத்தில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் இருளில் சிக்கித் தவித்தனர் திருவனந்தபுரம் மக்கள்.

உயிர்சேதம் தவிர்ப்பு...
அதேபோல், கிளிமானூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஒரு வீடு மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஓடுகள் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எச்சரிக்கை...
இதற்கிடையே, கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்றுடன் இடைவிடாது மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications