ரூ.4.05 லட்சம் பாக்கி! ராமர் சிலைக்கு கல் தந்த ஒப்பந்தாரர் வருத்தம்! இழுத்தடிக்கும் அயோத்தி கோவில்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கோவில் கருவறையில் 5 வயது பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை பக்தர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சிலை செய்ய கல் வழங்கிய ஒப்பந்ததாரருக்கு கோவில் நிர்வாகம் ரூ.4.05 லட்சம் பாக்கி வைத்து இழுத்தடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்கு கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை கோவிலில் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலை பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.
இந்த ராமர் சிலை என்பது புன்சிரிப்புடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது. சிலை தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்தார். மொத்தம் 51 இன்ச் உயரம் கொண்ட இந்த சிலை 200 கிலோ எடையுடன் உள்ளது. ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்களும், நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.
இந்நிலையில் தான் சிலை செய்ய கல் வழங்கிய தலித் விவசாயி படும் கஷ்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராமர் சிலை செய்ய தேவையான கல் என்பது கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் எச்டி கோட் தாலுகா புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் பெயர் கல்லின் பெயர் கிருஷ்ண ஷிலா என அழைக்கப்படுகிறது. இந்த கல் என்பது தலித் விவசாயியான 70 வயது நிரம்பிய ராம்தாஸ் என்பவரின் நிலத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசியரான இவர் விவசாயத்தில் ஆர்வமாக இருக்கிறார். சிறிய அளவில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ராம்தாஸ் தற்போது பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் 2.14 ஏக்கர் நிலம் வைத்துள்ளேன். இந்த நிலத்தை விவசாய பூமியாக மாற்ற முடிவு செய்தேன். இதனால் நிலத்தில் இருக்கும் பாறைகளை அகற்ற திட்டமிட்டேன். பாறை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சீனிவாஸ் நடராஜ் என்ற ஒப்பந்ததாரரிடம் வழங்கினே். அவர் எனது நிலத்தில் குவாரி நடத்தி வருகிறார்.
இந்த நிலத்தில் 2022 முதல் விவசாயம் செய்ய முயன்று வருகிறேன். ஆனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் தான் பாறையை அகற்ற முடிவு செய்து ஒப்பந்தம் வழங்கினேன். இதற்கிடையே தான் எனது நிலத்தில் இருந்து 3 பாறை துண்டுகள் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் ஒன்றை ராமர் சிலை செய்ய சிற்பி அருண் யோகிராஜ் தேர்வு செய்தார். இதனை ராமர் கோவிலில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்டது. இது மகிழ்ச்சியான விஷயமாகும்.
இப்போது தெற்கு பார்த்தபடி ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. அந்த சிலை என்பது கல் வெட்டப்பட்ட இடத்தை பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் அங்கு ராமர் கோவில் கட்ட முடிவு செய்தேன். இதற்காக 4 குண்டாஸ் நிலத்தை தானமாக வழங்கவும் முடிவு எடுத்துள்ளேன். கோவில் வைக்கப்படும் ராமர் சிலையை செய்து தர வேண்டும் என அருண் யோகிராஜை சந்தித்து பேச உள்ளோம். என்னை ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்கவில்லை'' என்றார். .
இதுபற்றி ராம்தாஸ் நிலத்தில் குவாரி நடத்தி வரும் ஒப்பந்தாரர் சீனிவாஸ் நடராஜ் கூறுகையில், ‛‛நிலத்தில் பெரிய பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதில் 3 பெரிய துண்டுகள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு ராமர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து தான் பரதன், லட்சுமணன், சத்ருகன் ஆகியோரின் சிலைக்கான கற்கள் கொண்டு செல்லப்பட்டன. எனக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறை ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. சட்டவிரோதமாக குவாரி நடத்துவதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலைக்கான கல்லை அயோத்திக்கு கொண்டு செல்ல சுமார் ரூ.6 லட்சம் ரூபாய் செலவழித்தோம், ஆனால் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஸ்ரீநாத் என்பவரிடம் இருந்து இதுவரை 1.95 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளோம். என்னையும் கோவில் கும்பாபிேஷகத்துக்கு அழைக்கவில்லை'' என மனம் வருந்தி உள்ளார். இதன்மூலம் கோவில் நிர்வாகம் தனக்கு ரூ.4.05 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக சீனிவாஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications