மகாராஷ்டிரா முதல்வராக 'பக்கா' ஆர்.எஸ்.எஸ். தளபதி 'பட்நவிஸ்'!
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேந்திர பட்நவிஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவரான 44 வயது தேவேந்திர பட்நவிஸ், இளம் வயதிலேயே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்தவர். தமது 22 வயதில் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினரானார்.

1997ஆம் ஆண்டு தமது 27 வயதில் நாக்பூர் மேயரானார். 1999ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர்.
மகாராஷ்டிரா பாஜகவில் ஊழல் கறைபடியாதவர் பட்நவிஸ். முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் நீர்ப்பாசனத் திட்ட ஊழலை அம்பலப்படுத்தியவர். மகாராஷ்டிராவின் விதர்பா முகமாக அறியப்படுகிறவர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 46 இடங்களைப் பெற்ற பாஜக இம்முறை 122 இடங்களைக் கைப்பற்றுவதற்கு பட்நவிஸ் வியூகமும் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்குக் கிடைத்த பரிசுதான் முதல்வர் பதவி.












Click it and Unblock the Notifications