தர்மபுரி பஸ் எரிப்பு: 3 அதிமுகவினர் தூக்கு தண்டனையை எதிர்க்கும் மனு ஒத்திவைப்பு
டெல்லி: தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு மூவர் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மனுவின் மீதான விசாரணையை மார்ச் 10ம்தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
கொடைக்கானல் ‘பிளசன்ட் ஸ்டே' ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர், வேளாண்மை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வந்த பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, விருதாச்சலத்தை சேர்ந்த காயத்திரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி ஆகியோர் உடல் கருகி இறந்தனர். 16 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர்.
இந்த வழக்கில் அதிமுகவினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது, விசாரணையின்போது அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 28 பேரில் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மூவரும் 2008ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் கடந்த 2013ம் தேதியன்று ஜூலை 14ம் தேதி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினர் மூவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும், 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் மூலம் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மறுசீராய்வு மனு உச்சநீதி மன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி லோதா முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது அதிமுகவினர் உட்பட 6 பேரின் கோரிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்தனர். 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மறுசீராய்வு மனுக்களை விசாரிக்கும். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஒரு மாதத்திற்குள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று முனியப்பன், நெடுஞ்செழியன், மாது ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.கே.சிக்ரி, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் விசாரணையை மார்ச் 10ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications