மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் நுழைவுத்தேர்வு கட்டாயம்- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்கான தேதி குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2012-ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013-ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கான மருத்துவக் கவுன்சிலின் உத்தரவு செல்லாது என்று 2013-ம் ஆண்டில் இடைக்காலத் தீர்ப்பு தடை விதித்தது. பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கஇந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான இடைக்காலத் தடையை ரத்து செய்து, பொதுநுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதற்கு தமிழகத்திலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று, மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நுழைவுத்தேர்வுக்கான தேதியை நாளை முடிவு செய்வதாகவும் இது குறித்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications