சட்டசபை சம்பவ வீடியோவை தேமுதிக எம்எல்ஏக்களுக்கு தராதது இயற்கை நீதிக்கு எதிரானது: சுப்ரீம்கோர்ட்
டெல்லி: தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ பதிவை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்காதது இயற்கை நீதியை மீறிய செயல் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
தமிழக சட்டசபையின் கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மார்ச் மாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தே.மு.தி.க. சட்டசபை துணைத்தலைவர் மோகன்ராஜ் முதல்வர் ஜெயலலிதா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் கடும் அமளி ஏற்பட தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

அப்போது சபை காவலர்களுக்கும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. முதலில் கூட்டத் தொடர் முடியும் வரை தேமுதிக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் இடைநீக்கம் செய்தார். பின்னர் சட்டசபை உரிமைக் குழு ஆய்வுக்கு விசாரணை நடத்தி தேமுதிகவின் சி.சந்திரகுமார் (ஈரோடு மேற்கு), மோகன்ராஜ் (சேலம் வடக்கு), எஸ்.ஆர்.பார்த்திபன் (மேட்டூர்), வெங்கடேசன் (திருக்கோவிலூர்), சி.எச்.சேகர் (கும்மிடிப்பூண்டி), தினகரன் (சூலூர்) ஆகிய 6 எம்.எல்.ஏக்களை ஓராண்டு காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
எஞ்சிய தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ. சல்லமேஷ்வர், சப்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் பற்றி உறுதிசெய்துகொள்வதற்கு உரிமை குழு அந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவருகிறது. இந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையில்தான் உரிமை குழு 6 எம்.எல்.ஏ.க்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உரிமை குழு அவர்களுக்கு அந்த வீடியோ பதிவுகளை காண்பித்து இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அந்த உறுப்பினர்களுக்கு சட்டரீதியான சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை தவறானது என்பதை அவர்கள் விளக்கமாக அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. வீடியோ பதிவுகளை கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை என்ற வாதத்தை மனுதாரர்கள் மீது சுமத்த முடியாது.
இயற்கை நீதியை கடைப்பிடிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்புடைய வீடியோ பதிவுகளை அளிக்க வேண்டியது உரிமை குழுவின் சட்டரீதியான கடமையாகும். அப்படி அவர்களுக்கு வீடியோ பதிவுகள் வழங்காததால் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படையான நீதிமுறையை உரிமைக் குழு கடைப்பிடிக்கத் தவறியுள்ளது.
எனவே, கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி அன்று இந்த 6 உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. 6 உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் மற்றும் பிற சலுகைகள் உடனடியாக வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications