முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாமா? சுப்ரீம் கோர்ட் சொல்வது என்ன?
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பதால் எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கூறுவதாலேயே எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த எதியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என கூறி எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் அந்த எம்.எல்.ஏக்களை சபாநாயகராக இருந்த போபையா தகுதி நீக்கம் செய்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்துக்கு போனார்கள். இதை விசாரித்த நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சிரியாக் ஜோசப் பெஞ்ச் 2011-ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
அத்தீர்ப்பில், முதல்வர் எதியூரப்பா மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என கூறுவதாலேயே எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் அடிப்படையில்தான் "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி" மீது நம்பிக்கை இல்லை என்கிற கடிதத்தை தயாரித்து ஆளுநரிடம் தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக கொடுத்தனர்.

தினகரன் தரப்பு வாதம்
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லை என்று எம்.எல்.ஏக்கள் கூறியிருந்தால் கட்சித் தாவல் தடை சட்டம் பாயலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 'முதல்வர்' மீது நம்பிக்கை இல்லை என்ற வாதத்தை மட்டுமே தொடர்ந்து தினகரன் தரப்பு முன்வைத்து வருகிறது.

ஓபிஎஸ்தான் நீக்கப்பட்டிருக்க வேண்டும்
அத்துடன் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக சட்சபையில் வாக்களித்தவர்கள் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள். முறைப்படி பார்த்தால் அந்த 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும் தினகரன் தரப்பு வாதம்.

அதிரடி நீக்கம்
மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாதிட்டு வந்த நிலையில்தான் இன்று சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்திருக்கிறார். தற்போதைய நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கை நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications