கர்நாடகா தேர்தல்: தமிழர் ஆதரவு கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் தமிழர் ஆதரவு கன்னட வேட்பாளரான தர்சன் புட்டனையாவுக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி வரும் கன்னடரான தர்சன புட்டனையாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.
மாண்டியா மாவட்டம், மேலுகோட்டைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் தர்சன் புட்டனையா. இவருக்கு ஆதரவுக் கரம் நீட்டி அறிக்கை வெளியிட்ட சீமான், ' கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த கே.எஸ்.புட்டனையா, தமிழகக் கர்நாடக நதி நீர் உரிமை சிக்கலைப்பற்றித் தெளிந்த சிந்தனை கொண்டவராகவும் தமிழர்களுக்கான காவிரி நீதி உரிமையை ஆதரித்து கர்நாடக விவசாயிகளிடையேயும் மக்கள் மன்றத்திலும் பேசிவந்தவர்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் மறைந்தார். இந்நிலையில் புட்டனையாவின் மகன் தர்சன் புட்டனையா, மேலுகோட்டை தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கிருக்கிறார். தந்தையைப் போலவே முற்போக்குச் சிந்தனை கொண்ட தனயனும் காவிரி நதிநீர் உரிமை சிக்கலில் அறிவுப்பூர்வமான நிரந்தரத் தீர்வுக்கான நிலைப்பாட்டைத் தெரிவித்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். விவசாயிகளின் ஆதரவை பெற்று, தங்களைத் தனி மதமாக்க கோரும் வீரசைவ லிங்காயத்து மக்களின் ஆதரவை பெற்று மேலுகோட்டை தொகுதியில் போட்டியிடும் அன்புச் சகோதரன் தர்சன் புட்டனையாவிற்கு முழு ஆதரவு கொடுக்கிறோம்.
அவரை ஆதரித்துக் கர்நாடக நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அவரின் வெற்றிக்குத் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கும் போராட்டத்திலும் லிங்காயத்துகளைத் தனிமதமாக அறிவிக்கக்கோரும் போராட்டத்திலும் என்றென்றைக்கும் நாம் தமிழர் கட்சி உற்ற துணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நாம் தமிழர் நிர்வாகிகள் அடங்கிய பிரசாரக் குழுவை ஒருங்கிணைத்து, கர்நாடகாவுக்கு அனுப்பியிருக்கிறார் சீமான். இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் நிர்வாகி ஒருவர், சீமானின் பேச்சுக்களை கர்நாடக சட்டசபையில் பேசியவர் புட்டனையா. அவருடைய மகனின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என எங்களிடம் வலியுறுத்தினார் சீமான். மேலுகோட்டையில் தமிழர் வாழும் பகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்ய இருக்கிறோம். தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்தில் சீமானும் கலந்து கொள்ள இருக்கிறார்.
எங்களை இனவாதி, பிரிவினைவாதி, ரத்த லேப் டெக்னீஷியன் என விமர்சித்தவர்களை எல்லாம், எங்களுடைய செயலால் தகர்ப்பதுதான் இந்தப் பிரசாரப் பயணத்தின் நோக்கம்" என்றார்.












Click it and Unblock the Notifications