மீண்டும் முதல்வர் ஆகிறாரா ஷிண்டே? பீகார் மாடல் பிளானில் பாஜக? மகாராஷ்டிராவில் நீடிக்கும் சஸ்பென்ஸ்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மிக அதிக சீட்களை வென்றுள்ள போதும் முதல்வர் பதவியை ஷிண்டே விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எனவே, மகாராஷ்டிரா அரசியல் களத்தில் முதல்வர் யார் என்பதில் 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில், ஆளும் கட்சி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணி படுதோல்வி: எதிர்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.
தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனிப்பெரும் கட்சியாக பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்பார் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது முதல்வர் நாற்காலியை விட்டுத்தரத் தயாராக இல்லை. எனவே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே நீடிக்கிறது.
நேற்று தேர்தல் முடிவுகள் வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, "இறுதி முடிவுகள் வரட்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாகத் தான் தேர்தலை சந்தித்தோம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, 3 கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்" என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த முதல்வர் யார்?: பாஜக தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், "அனைவரும் கலந்து ஆலோசித்த பிறகே முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் யார் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தலுக்குப் பின், மூன்று கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து, இதை முடிவு செய்வது என முன்பே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும், இதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார்.
அதேசமயம், இரு கட்சியினர் மத்தியிலும் முதலமைச்சர் பதவி தொடர்பாக பெரிய விவாதமே நடக்கிறது. இந்த தேர்தலை கேப்டன் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தான் சந்தித்தோம். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம், எனவே மீண்டும் அவர் தான் முதல்வராக வேண்டும் என சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர். பாஜகவினரோ, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டு கூட்டணி கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க தேவையில்லை, பாஜகவினரின் உழைப்புக்கு மரியாதை தரவேண்டும், பாஜக சார்பில் முதல்வர் வரவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
சிவசேனா முன்வைக்கும் பாயிண்ட்: ஏக்நாத் ஷிண்டேவே முதலமைச்சர் ஆவார் என்பதற்கு சிவசேனா கட்சியினர் ஒரு பாயிண்டையும் எடுத்து வைக்கின்றனர். அதாவது, பீகாரில் பாஜக அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை கொண்ட பெரிய கட்சியாக உள்ளது. ஆனால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களை கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவிலும் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்ந்து முதல்வராக்கும் எனக் கூறுகின்றனர்.
பாஜக இந்த முடிவை எடுக்குமா?: மத்திய அரசில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு மக்களவையில் 7 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர். எனவே, தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது, ஷிண்டேவை தொடர்ந்து முதலமைச்சராக பாஜக வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று இரவு சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உதய் சமந்த், க்நாத் ஷிண்டேவை கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை முன்வைத்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தை அமைக்க ஷிண்டேவுக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications