தேக்கு.. அசைக்க முடியுமா? 1 லட்சம்+ ஓட்டு வித்தியாசத்தில் வென்ற பாஜக ‘தலை’! மீண்டும் முதல்வர் ஆவாரா?
போபால்: மத்திய பிரதேசத்தில் 17 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், இந்த சட்டசபை தேர்தலில், 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிரி புதிரி வெற்றியைப் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இன்று காலை 8 மணி முதல் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை பெற்றிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. என்றாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, வெற்றியை உறுதி செய்து வருகிறது பாஜக.

அபார வெற்றி: மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை எனும் நிலையில், பாஜக 167 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 62 இடங்களில் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒரு தொகுதிகளில் பாரத் ஆதிவாசி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2018 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், பாஜக 58 இடங்கள் அதிகமாகவும், காங்கிரஸ் 52 இடங்களை இழந்தும் இருக்கின்றன. முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டிகள் நிலவும் என்று தெரிவித்திருந்தன. வெளியான 10 கருத்துக் கணிப்புகளில் 4 பாஜக வெற்றி பெறும் என்றும், 2 காங்கிரஸ் வெற்றி பெறும் எனவும், மற்றவை கடுமையான இழுபறி ஆக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தன.
எனினும், கருத்துக்கணிப்புகளை மீறி, பாஜக அபார வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸிடமிருந்து கடந்த 2003ஆம் ஆண்டில் ம.பி மாநிலத்தை தட்டிப்பறித்த பாஜக அப்போது முதல் தமது வேரை மத்தியப் பிரதேசத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அதற்கு பின்னர் நடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த முறையும் அபார வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தை பாஜக கோட்டை என்று நிறுவியுள்ளது.
1 லட்சம் ஓட்டு வித்தியாசம்: மத்திய பிரதேசத்தின் நட்சத்திர தொகுதிகளைப் பொறுத்தவரை, புத்னி தொகுதியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் சாதாரணமாக இல்லை. 1 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் மஸ்தாலை தோற்கடித்துள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.
சிவ்ராஜ் சிங் சவுகான் பெற்ற வாக்குகள், 1,64,951. காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள்: 59,977. இதுவரை சிவராஜ் சிங் சவுகான் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, இப்போதுதான் மிக அதிக வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் முதல், ஐந்தாவது முறையாக புத்னி தொகுதியில் வென்றுள்ளார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.
கமல்நாத்: அதேசமயம், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் வெற்றியை ருசித்து வரும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறிது நேரம் பின்னடைவைச் சந்தித்தார். பின்னர், பாஜக வேட்பாளர் விவேக் பண்டி சாஹுவை முந்தி, தற்போது வெற்றி முகத்தில் உள்ளார்.

இந்தூர் 2 தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் மெண்டோலா, 1 லட்சத்து 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவராஜ் சிங் சவுகான், ரமேஷ் மெண்டோலா ஆகிய இருவர் தான் மிக அதிக வாக்கு வித்தியாசம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
ம.பி அடுத்த முதல்வர்: முன்னாள் முதல்வர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி, முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய நிலையில், சட்டசபை தேர்தலில் பாஜக தனது முதல்வர் முகத்தை அறிவிக்கவில்லை. ம.பி.யில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தில் தற்போது முதல்வராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் பதவியை அலங்கரிப்பாரா? அல்லது புது முகம் யாராவது முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. மக்களவை தேர்தல் வரை சிவராஜ் சிங் சவுகானை வைத்துக்கொண்டு அதன்பிறகு அவர் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications