பவன் கல்யாண் கான்வாய்க்காக போக்குவரத்தை முடக்கிய போலீசார்.. JEE தேர்வை தவறவிட்ட மாணவர்கள்! ஷாக்
அமராவதி: விசாகப்பட்டினத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய்க்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தங்களால் சரியான நேரத்தில் தங்கள் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை என்றும் இதனால் பொறியியல் நுழைவுத் தேர்வை எழுத முடியவில்லை என்றும் 30 மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், இதற்கு ஆந்திரா போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் இப்போது தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்குத் துணை முதல்வராகப் பவன் கல்யாண் இருக்கிறார். அவர் இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே பொறியியல் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் சிலர் பவன் கல்யாண் மீது பரபர புகாரை முன்வைத்துள்ளனர்.

பவன் கல்யாண்
அதாவது பவன் கல்யாண் கான்வாய் ஏற்படுத்திய போக்குவரத்து இடையூறு காரணமாக தங்களால் சரியான நேரத்தில் தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது பெண்டுர்த்தி என்ற இடத்தில் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதக் காத்திருந்தனர். அவர்கள் வழக்கம் போலத் தேர்வுக்குத் தயாராகிக் கிளம்பியுள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் துணை முதல்வரான பவன் கல்யாண் சென்றதால் அவரது கான்வாய்காக போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களால் தேர்வு மையத்திற்குச் செல்ல முடியவில்லை. பவன் கல்யாண் கான்வாய் சென்ற பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் தேர்வு மையத்தைத் தாமதமாக அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் 30 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்றும் தேர்வு மைய வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் சாடல்
எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கார்த்திக் யெல்லபிரகடா, "ஆந்திராவுக்கு ஒரு நல்ல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவை. அவர் (பவன் கல்யாண்) தன்னை ஒரு சினிமா ஸ்டார் போலவே இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் சினிமா ஸ்டைலை நிறுத்திவிட்டுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
போலீசார் விளக்கம்
இருப்பினும், இது குறித்து போலீசார் தரும் விளக்கம் வேறு விதமாக இருக்கிறது. அதாவது மாணவர்கள் காலை 7 மணிக்குள் தேர்வு மையங்களை அடைய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பவன் கல்யாண் 8.30 மணியளவில் தான் அங்குச் சென்றார். எனவே பவன் கல்யாணால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை ஏற்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாயார் புகார்
இது குறித்துத் தேர்வு எழுத முடியாத மாணவர் ஒருவரின் தாயார் பி. கலாவதி கூறுகையில், "பவன் கல்யாண் கான்வாயால் நாங்கள் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டோம். பவன் கல்யாண் அரக்குக்குச் சென்று கொண்டிருந்ததால் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். இதனாலேயே தேர்வு எழுத முடியவில்லை" என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அகில இந்திய மாணவர் கூட்டமைப்பும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு நேரத்தில் அதிகாரிகள் மிக மோசமாகப் போக்குவரத்தை கையாண்டுள்ளனர் என்றும் மாணவர்கள் தங்கள் செய்யாத தவற்றுக்குத் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications