”ஏசி” இயங்காத ஏர் இண்டியா விமானம்– தவித்துப் போன பயணிகள்- ஏனென்று கேட்காத நிர்வாகம்
அகமதாபாத்: மும்பையிலிருந்து புறப்பட்ட ஏர் இண்டியா விமானத்தின் குளிர்சாதன கருவி இயங்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஏஐ-643 என்ற ஏர் இண்டியா நிறுவன விமானம் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு கிட்டத்தட்ட 100 பயணிகளுடன் புறப்படுவதாக இருந்தது.
ஆனால் ஒரு மணி நேரம் காலதாமதத்துடனேயே இந்த விமானம் மும்பையிலிருந்து பறக்கத் துவங்கியது.

ஏசி இயங்கவில்லை:
இத்துடன் இந்த விமானத்தின் குளிர்சாதன கருவியும் சரிவர இயங்கவில்லை. உள்ளிருந்த வெப்பத்தினால் மிகுந்த சிரமத்தை உணர்ந்த பயணிகள் விமானியிடம் இதுகுறித்து முறையிட்டபோதும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

புகார் அளித்தும் பயனில்லை:
"நாங்கள் விமானத்தில் ஏறியதுமுதலே அங்குள்ள குளிர்சாதனக் கருவிகள் வேலை செய்யவில்லை. இதுகுறித்து புகார் அளித்தபோது விமானம் ஓடுபாதையில் செல்லத்தொடங்கியதும் சீராகிவிடும் என்று ஊழியர்கள் குறிப்பிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை" என்று ஹேமந்த் ஷா என்ற பயணி தெரிவித்தார்.

இதய நோயாளி சிறுவன் தவிப்பு:
மும்பையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூன்று வயது சிறுவனான வன்ஷ் ஜெயின் தனது பெற்றோர்களுடன் இந்த விமானத்தில் பயணித்தான். அந்த குழந்தை இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியது என்றும், அவனது உடல்நிலை மேலும் மோசமடைந்தது என்றும் சக பயணிகள் கூறினர்.

பயணிகள் ஆர்ப்பாட்டம்:
அகமதாபாத்தில் இறங்கியதும் இந்தப் பயணிகள் சிறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னரே கலைந்து சென்றனர்.

கோளாறு சரி செய்யப்பட்டது:
50 சதவிகிதம் வேலை செய்த குளிர்சாதனக் கருவிகளால் விமானத்தின் உள்ளிருந்த வெப்பத்தைக் குறைக்கமுடியவில்லை என்று ஏர் இண்டியா அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தக் கோளாறு அங்கு சரிசெய்யப்பட்டபின் மஸ்கட்டிற்கான தனது பயணத்தைத் துவங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications