அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோரும் சு.சுவாமி மனு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவையும் இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

அயோத்தியில் இந்துக்கள் வழிபடுவதற்கு வழிவகை செய்யுமாறு, அங்கு ராமர் கோயில் கட்ட உத்திரப் பிரதேச அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் நில அளவியல் அடிப்படையில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், இந்து மத ஆகமப்படி ஒரு கோவிலை வேறு இடத்திற்கு மாற்றுவது சரியானது அல்ல என கூறியும், சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார்
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
