மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் மாமனார் முதல்வர், கணவர் து.முதல்வர், சகோதரர் அமைச்சர்!!
அமிர்தசரஸ்: மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றிருப்பதன் மூலம் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பஞ்சாப் சிரோமணி அகாலிதளத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் மாமனார்தான் சிரோமணி அகாலிதளத்தின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல். பஞ்சாப் துணை முதல்வரும் அகாலிதளத்தின் தலைவருமான சுக்பீர்சிங்கின் மனைவிதான் ஹர்சிம்ரத் கவுர்.
இவரது சகோதரர் பிக்ரம்சிங் மஜிதியா, பஞ்சாப் மாநில வருவாய்த் துறை அமைச்சர்.

1966ஆம் ஆண்டு பிறந்த ஹர்சிம்ரத் படித்ததெல்லாம் டெல்லியில்தான். டெல்லி பல்கலைக் கழகத்தில் ஜவுளித்துறை தொடர்பான பட்ட படிப்பு முடித்தவர். ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார் ஹர்சிம்ரத் கவுர்.
கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில்தான் முதன் முறையாக கவுர் களத்துக்கு வந்தார். அவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்கின் மகன் ரனீந்தர் சிங்கை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த தேர்தலில் தமது மற்றொரு மாமனார் அதாவது பிரகாஷ்சிங் பாதலின் சகோதரர் மகன் மன்பிரீத் பாதலை எதிர்த்து போட்டியிட்டு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரம்புராவை மத்திய அமைச்சராக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹரிசிம்ரத் கவுர் மத்திய அமைச்சராகக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ஹர்சிம்ரத் கவுரும் அகாலிதளத்தில் அடுத்த முக்கிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications
