காசி ஞானவாபி மசூதி வழக்கு..தொல்லியல் துறை அறிக்கை! இந்து, முஸ்லிம் தரப்பினரிடம் தர நீதிமன்றம் உத்தரவு
லக்னோ: ஞானவாபி மசூதி நிலத்தில் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்து உள்ள காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமாக இருந்து வருகிறது. இதன் அருகாமையிலேயே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய ஞானவாபி என்ற மசூதியும் அமைந்து உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவற்றுக்கு அருகே சிங்கார கவுரி அம்மன் சிலையும் உள்ளது. ஒரு காலத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக சொல்லப்பட்ட இந்த இடம் தற்போது பிரச்சனைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.

காரணம் சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஜை நடத்த அனுமதிகோரி பெண் பக்தர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி இந்த உத்தரவை எதிர்த்து வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் விசாரித்த நீதிமன்றம் அம்மாதம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வு செய்ய தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மசூதியில் கள ஆய்வு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் போன்ற ஒரு கல் இருப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. அதன் பின்னர் நீதிமன்றம் சிவலிங்கம் போன்ற கல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் இல்லை என்றும், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரூற்று போன்ற அமைப்பு எனவும் மசூதி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல் இந்திய தொல்லியல்துறை மசூதியில் செய்த அறிவியல்பூர்வ சர்வே முடிவுகளை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்து கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா என்பதை உறுதிபடுத்துமாறு கேட்டது. இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின், இது தனியார் ஊடகத்திடம் தெரிவிக்கையில், "இரு தரப்பினருக்கும் தொல்லியல் துறை ஆய்வு முடிவுகள் கிடைக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு எங்களுக்கு இடையே உள்ளது. நீதிமன்றமும் இதற்கு ஒப்புக்கொண்டது." என்றார்.
சைபர் குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடிவுகளின் காப்பிகளை விநியோகிக்க தொல்லியல் துறை மறுத்ததாகவும், நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு அதை கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications