தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றால் நடிகை விஜயசாந்திதான் முதல்வர்?: ராகுல் சூசக பேச்சால் பரபரப்பு!!
வாரங்கல்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால் மாநில முதல்வராக ஒரு பெண்தான் வர வேண்டும் என விரும்புவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் கருத்துப்படி நடிகை விஜயசாந்திக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் முதல்வர் பதவி கனவில் இருக்கும் இதர காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கும் தற்போது தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாரங்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானாவில் ஒரு பெண் முதல்வராக வேண்டும் என்பதுதான் என் கனவு. தெலுங்கானா மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறார்கள். நாங்கள் ஏற்கெனவே பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளித்துள்ளோம். லோக்சபா தேர்தல்களிலும் 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
தற்போதைய நிலையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றால் ராகுல் கருத்துப்படி நடிகை விஜயசாந்தி முதல்வராக வாய்ப்பு இருக்கிறது.
நடிகை விஜயசாந்தி முதலில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தல்லி தெலுங்கானா என்ற தனிக்கட்சியை நடத்தினார். அதைக் கலைத்துவிட்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தார். தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்கிக் கொடுத்ததால் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எம்.பி.யாக இருந்த விஜயசாந்தியை தற்போது மேடக் சட்டசபை தொகுதியில் போட்டியிட வைத்திருக்கிறது காங்கிரஸ். அவரும் இந்திரா காந்தி பாணியிலேயே உடை அணிந்து ஒரு வருங்கால முதல்வர் தோரணையில்தான் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது ராகுலின் பேச்சு விஜயசாந்தி ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஆனால் ராகுலின் இந்த பேச்சால் முதல்வர் பதவி கனவில் இருக்கும் பொன்னால லட்சுமணய்யா போன்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications