கை இல்ல.. கால் இல்ல.. ஒரே கதறல் சத்தம்! யாருக்கு உதவுவது? ரயில் விபத்தால் அதிர்ச்சியில் உறைந்த பயணி!
புவனேஸ்வர் : கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான நிலையில், அந்த ரயிலில் பயணித்தவர்கள் கூறும் தகவல்கள் நெஞ்சை உறையச் செய்வதாக உள்ளன. ஒருவர், தாங்கள் இருந்த பெட்டியில் பலருக்கு கை, கால்கள் இல்லாமல் கதறியதாகத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.

அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி, அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன.
2 பயணிகள் ரயில் மற்றும் 1 சரக்கு ரயில் மோதி தடம்புரண்ட இந்த கோர விபத்தில் 233 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலியானோரின் உடல்கள் மற்றும் காயமானவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் உயிர் தப்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள், விபத்தின் போது கண்ட காட்சிகளை விவரித்துள்ளனர். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விபத்தின் கோரக் காட்சிகளை பயணிகள் விவரித்துள்ளது கேட்போரை கலங்கச் செய்வதாக உள்ளது.
"ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். எப்படி ரயில் மோதியது என்று தெரியவில்லை. விபத்து நடந்த போது பலத்த சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.
ரயிலில் இருந்து கீழே இறங்கிப் பார்த்த போது, எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். காப்பாற்றுங்கள், உதவுங்கள் என்று பலர் கத்திக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கு உதவுவது? அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்." என்று தெரிவித்துள்ளார்.

விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மற்றொருவர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன். எனக்கு கையிலும் பின்னங் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் பெட்டியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவர் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தை நேரில் பார்த்த மற்றொருவர், "இந்தப் பெட்டியில் யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். எல்லோரும் பயத்தில் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை." என பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications