லக்கிம்பூர் வன்முறை: பிரேத பரிசோதனை செய்யாமல் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம்- உறவினர்கள் திட்டவட்டம்
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட 3 விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் வாகனம் வேண்டும் என்றே விவசாயிகள் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து வெடித்த வன்முறையில் மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.

அணி திரண்ட எதிர்க்கட்சிகள்
இந்த வன்முறை சம்பவம் விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கி உள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் இந்த வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் முதல்வரும் தடுக்கப்பட்டார்
இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடை விதித்தது.

பிரேத பரிசோதனை
மேலும் இறந்த விவசாயிகளின் உடல்களை பிரதேச பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப் போவதும் இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். விவசாயிகளுக்காக போராடியதால அநீதியாக தங்களது உறவுகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் திட்டவட்ட மறுப்பு
ஆனால் மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவோ, என் மகன்தான் வன்முறைக்கு காரணம் என ஆதாரத்தைக் காட்டுங்கள்.. நானே அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்கிறார். ஏற்கனவே அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா மகன் மீது உ.பி.யில் ஆளும் பாஜக அரசுதான் கொலை வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்ததாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications