இந்துக்கள் மீது தாக்குதல்..வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது.. கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு
கொல்கத்தா: வங்கதேச நாட்டில் இட ஒதுக்கீடுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இப்போது அங்குள்ள சிறுபான்மை சமுதாய மக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனை இனி வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
வங்கதேச நாட்டில் இஸ்கான் கோயிலுக்கு எதிராக உள்ளூர்வாசிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் என்ற துறவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இஸ்கான் நடவடிக்கைக்கு தடை விதிக்க சொல்லி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற பேரணியில், அந்நாட்டு கொடி மீது காவிக்கொடி ஏற்றிய புகாரில் தான் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்குப்பதிந்து கை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ண தாஸ் ஜாமீன் வழக்கை டாக்கா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து அங்கு இந்துக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.
வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக உள்ள பேராசிரியர் முகது யூனுஸ், "வங்கதேசத்தில் இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் நியாயமான விசாரணை நடைபெறும். இந்தியாவில் நடக்கும் விஷயங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. இது எங்கள் உள்நாட்டு விவகாரம். இதில் இந்திய அரசு கருத்து சொல்லியிருக்க அவசியமில்லை." என்று கூறியிருந்தார்.
இந்த அசாதாரண சூழல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச நாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். "இந்துக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்திவிட்டு, உடனடியாக கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வேண்டும்." என்று ஆர்எஸ்எஸ் வங்கதேச அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக இந்திய - வங்கதேச எல்லையான மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஜேஎன் ரே மருத்துவமனை, "இனி வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம். இப்போது அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்துகிறோம்." என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் எங்கள் மருத்துவமனையில் வங்கதேச நோயாளிகளை அனுமதிக்க மாட்டோம். அங்கு போராட்டம் என்கிற பெயரில் இந்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி, நம் மூவர்ண கொடியையும் அவமதித்து வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். இதை கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்." என்று கூறியுள்ளனர்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "வங்கதேச அரசு அந்நாட்டில் உள்ள சிறுபான்மை சமுதாய உள்பட அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறைகளை ஏற்க முடியாது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது வங்கதேச அரசின் கடமை." என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications