மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கம்.. பாஜக அரசு உத்தரவால்.. மேற்கு வங்கத்தில் சர்ச்சை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கிறது. இதனால் காரணமாக மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பெரிய விவாதமாக வெடித்துள்ள சூழலில், பல்வேறு தரப்பினரும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தின் அரசியல் களத்தில் தற்போது 'டிம்'-ஓ-கிரசி (Dim-o-cracy) என்ற புதிய சொல் தான் விவாதமாக வெடித்துள்ளது. வங்காள மொழியில் 'டிம்' என்றால் முட்டை. முட்டையை மையமாகக் கொண்டு வெடித்துள்ள அரசியல் மோதலைக் குறிக்கவே இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்ததே இந்தப் புயலுக்கு முக்கியக் காரணம்.

முட்டை நீக்கம்
இஸ்கான் அமைப்பால் தரமான உணவுகளை வழங்க முடியும் என்றாலும், அது முற்றிலும் சைவ உணவாக மட்டுமே இருக்கும். மேற்கு வங்க மக்கள் பெரும்பாலும் அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் என்பதால் இந்த முடிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அசைவ உணவை தங்கள் அடையாளமாகக் கருதும் மக்களிடையே இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பிரிவினர் மட்டுமின்றி, அவரது எதிர்த் தரப்பையும் கூட இந்த விவகாரம் பாஜக அரசுக்கு எதிராகத் திருப்பியுள்ளது.
எதிர்ப்பு
இந்த முடிவை திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி டெரெக் ஓ பிரையன் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் மீன் சாப்பிடும் நாடகம் போட்டவர்களின் உண்மையான முகம் இப்போது வெளிவந்துவிட்டதாக அவர் கூறினார். பள்ளி குழந்தைகளின் மதிய உணவிலிருந்து முட்டையை நீக்கி அவர்களின் ஊட்டச்சத்தைப் பறிப்பதாகவும், திணிக்கப்படும் சைவக் கலாச்சாரத்தை மேற்கு வங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் பதிவிட்டார்.
மற்றொரு மம்தா பானர்ஜியின் ஆதரவாளரான குணால் கோஷ், "இஸ்கான் அமைப்பு மீது எங்களுக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால், குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு முட்டை அவசியம் என்பதால் நிதி அமைச்சர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாணவர்கள் ஏன் கட்டாயம் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி குழுத் தலைவர் ரிதப்ரதா பானர்ஜியும் முட்டையை நீக்குவது சரியல்ல என்றார். அது புரதச்சத்தின் முக்கிய ஆதாரம் என்பதால், வங்கத்து மக்களின் பாரம்பரிய அசைவ உணவுப் பழக்கத்துக்கு இது பொருந்தாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பாஜக பதில்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக, மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாற்று வழிகளை ஆராய்வதாக தெரிவித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, "இஸ்கான் தரமான முறையில் உணவு வழங்கும். யாரையும் ஹரே கிருஷ்ணா என்று சொல்ல வற்புறுத்த மாட்டார்கள். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, தூய்மையான உணவு கிடைக்கும்" என்றும் அவர் உறுதியளித்தார்.
சைவ உணவு
இது தொடர்பாக இஸ்கான் துணைத் தலைவர் ராதா ராமன் தாஸ், "2012-ல் வட கொல்கத்தா பள்ளிகளில் இஸ்கான் மதிய உணவு வழங்கினோம்.. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்கான் வெற்றிகரமாக மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சைவ உணவிலும் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. விராட் கோலி உள்ளிட்ட சைவ வீரர்களை என்னால் உதாரணமாகச் சொல்ல முடியும்.. ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து குழந்தைகளுக்குப் பிடித்த உணவுப் பட்டியல் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மேற்கு வங்கத்தில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவை கலாச்சார அடையாளங்களுடன் பிணைந்துள்ளன. பால் உற்பத்தி குறைவாக உள்ள மாநிலத்தில் ஏழை, நடுத்தரக் குழந்தைகளுக்கு மலிவான புரதச்சத்து ஆதாரமாக முட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தலின்போது அசைவ உணவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக, இப்போது முட்டையை நீக்கியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications