மணிப்பூரே முடியல.. அதற்குள் ஹரியானாவில் "பதற்றம்!" திடீரென பரவிய வன்முறை.. உண்மையில் என்ன காரணம்!
சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கே பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே இனக்கலவரத்தால் மாநிலமே பற்றி எரிவது அனைவருக்கும் தெரியும். இந்த இனக் கலவரத்தால் அங்கே ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. மிக மோசமான நெஞ்சை உலுக்கும் சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க நேற்றிரவு ஹரியானா மாநிலத்திலும் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கே இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்..
வன்முறை: ஹரியாணா மாவட்டம் நூஹ் மாவட்டத்தில் தான் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு மத ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதில் சிலர் கொல்லப்பட்ட நிலையில், வன்முறையை தடுக்கும் பணிகளில் ஈடுபட்ட போலீசார் பலரும் இதில் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையால் குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
போலீசார் தகவல்: இது குறித்து போலீசார் கூறுகையில், "இந்த மத வன்முறையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் என இருவர் கொல்லப்பட்டனர்.. இந்த வன்முறையில் போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் இதனால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, அங்கு ஹரியானாவில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. நூஹில் பகுதியில் மத ஊர்வலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்ததால் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.
பெரும் பதற்றம்: அங்குள்ள நூஹ் மாவட்டத்தில் பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்போது ஊர்வலத்தை நோக்கி சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூஹ் மாவட்டத்தில் மத வன்முறை ஏற்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், சோஹ்னா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களிலும் வன்முறை பரவியது. இதையடுத்து அங்கு பல சாலை மறியல் சம்பவங்கள் நடந்தன. சிலர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். கடைகள், வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
என்ன காரணம்: இரண்டு முஸ்லீம்களை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் ஊர்வலத்தில் பங்கேற்பதாக வதந்தி பரவியதே இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தால் ஹரியானா மாநிலம் முழுக்க பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ஹரியானா அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications