திருப்பதி மாதிரி முயன்றதால் சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு தாமதம்? பின்னணி என்ன?
கேரளா: சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை பக்தர்களின் கூட்டம் 18 லட்சத்தைக் கடந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 40 லட்சம் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவுக்கு ஒரு மலைப்பிரதேசத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கிப் போய் நிற்கிறது காவல்துறை.

சில நாள்கள் முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், போலீஸ்காரர் ஒருவர் முன் இரண்டு கரங்களைக் கூப்பிக் கொண்டு 'அப்பா..அப்பா' என்று கதறிய காட்சி அந்த மாநிலத்தையும் கடந்து வாழும் ஐயப்ப பக்தர்களைக் கலங்கடித்திருக்கிறது.
இந்தக் கூட்டத்தை ஒரு காரணமாக வைத்து கேரள பாஜக தங்களின் அரசியலை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. கூட்டத்தைச் சரியாகக் கையாள தவறிவிட்டதாகக் கூறி அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்து கோஷங்களை எழுப்பினர்.
ஏற்கெனவே பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழிகளைத் தேடிக்கொண்டிருந்த காவல்துறைக்கு இந்தப் போராட்டம் மேலும் தலைவலியைத் தரக்கூடியதாக மாறியது.

பலரும் எந்த ஆண்டும் இல்லாத அளவு கூட்டம் அலைமோதுவதாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு இந்த மாதிரியான தலைவலிப் பிடித்த சம்பவங்கள் இதற்கு முன்பே நடைபெற்றுள்ளன.
கடந்த 2016 இதைப்போன்று ஏற்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர். அதில் இருவர் பெரிய அளவில் படுகாயங்கள் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைப்போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு இதே அளவுக்குக் கூட்டம் குவிந்தது. ஆனால், அதை முறையாக காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். பம்பையிலிருந்து சந்நிதானம் வரையான பாதைகளில் ஆங்காங்கு தற்காலிக தடுப்புகளை அமைத்துக் கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து அனுப்பினர். அதனால் பெரும் நெரிசல் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
காவல்துறையின் இந்த ஐடியா பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது மட்டுமல்ல; அதற்காகக் கேரள காவல்துறையைப் பலரும் பாராட்டினர். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. காவல்துறை தன் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்திருக்கிறது.

அதற்குக் காரணம் என்ன?
பல ஆண்டுகளாகச் சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றுவரும் அரவிந்த் சுப்பிரமணியம் என்பவர் இந்தக் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என்ற சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காகக் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். அதில் எந்த மாற்றமும் இதுவரை இருந்ததில்லை" என்ற அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
"சபரிமலையில் அதிகபட்சம் 10 மணிநேரம் காத்திருந்தால் சாமியைத் தரிசனம் செய்துவிடலாம். அதற்கு மேல் இதுவரை பக்தர்கள் காத்திருந்ததாக வரலாறு இல்லை.

வழக்கமாகப் பக்தர்கள் நிலக்கல் தொடங்கி பம்பை வரை செல்வார்கள். அங்கிருந்து மீண்டும் சபரிமலைக்குப் போக வேண்டும். முன்பு இதற்கான நேரம் 10 மணிநேரம் இருந்தது. ஆனால் இப்போது இதற்கா கிட்டத்தட்ட 32 மணிநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதுதான் பிரதான பிரச்சினை.
இந்தப் பிரச்சினைக்கு முழுக் காரணம் சபரிமலை தேவஸம் போர்டுதான். அவர்களின் நிர்வாகக் குளறுபடிதான் இந்த நிலைமைக்குள் பக்தர்களைத் தள்ளியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகள் முன்புவரை கோயில் கேரள போலீஸ்சார் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஹைகோர்ட் உத்தரவின்படி சபரிமலை தேவஸம் போர்டு கைக்கு நிர்வாகம் சென்றுவிட்டது. கோயில் நிர்வாகம் ஆன்லைன் மூலம் சகட்டுமேனிக்கு முன்பதிவு திறந்துவிட்டுள்ளது. அதில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரச்சினை வந்தது. அது இப்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது" என்கிறார் அரவிந்த் சுப்பிரமணியன்.

"உதாரணமாக ஒரு நாளில் காலை முதல் மாலை வரை இவ்வளவு பேர் தரிசனம் செய்யலாம் என்று ஒரு ஸ்லாட் வைத்துள்ளார்கள். அதன்படி அந்த நபர்கள் உள்ளே செல்கின்றனர். ஆனால், இதற்கிடையில் நேரடியாக வருபவர்களுக்கு ஸ்பாட் அட்மிஷன் உண்டு என்றும் ஒரு புதிய வரைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஒருநாளில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது சரியாகக் கணிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
'திருப்பதி மாடல்' என்று ஒன்றை அறிமுகம் செய்துள்ளது கோயில் நிர்வாகம். ஆனால், திருப்பதி உள்ள அளவுக்கு முறையான உள்கட்டமைப்பு சபரிமலையில் இல்லை. இங்கே வெறும் மரப் பாலம் மற்றும் வெறும் கூண்டு கட்டி வைத்திருக்கிறார்கள். அதில் எவ்வளவு பேரை அடைக்க முடியும்? அங்கே சாப்பாடு வசதி இல்லை என்பதைவிடக் கழிப்பிட வசதிகூட இல்லை என்பதே பிரச்சினை.
திருப்பதியில் ஒருவர் எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும் அவருக்கு உரிய உணவு கிடைக்கும். உள்ளேயே கிடைக்கும். அவர் தனது இயற்கை உபாதைகளைக் கழித்துக் கொள்ள முடியும். சபரிமலையில் இந்த வசதிகள் உள்ளதா? எந்த வசதியையும் செய்யாமல் வெறும் 'திருப்பதி மாடல்' என்று கூட்டத்தைத் திறந்துவிட்டதால் வந்த நிலை இது.
திருப்பதி மாடலில் மலையேறி வருபவர்களுக்கு என்று தனி வழியை அமைத்துள்ளனர். ஆனால் அப்படி சபரிமலையில் இல்லை. ஒரு லட்சம் பேர் மலைக்கு வந்தால், அதில் 5 முதல் 8 ஆயிரம் பேர் வரை மட்டுமே பெரிய பாதை வழியே வருகிறார்கள்.

கரிமாலையில் ஒரு பாஸ் வழங்கப்பட்டிருந்தால் பெரிய பாதை வழியே வருபவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருந்திருக்கும். 3 நாள்கள் பெரிய பாதையில் நடந்து வந்த அந்தப் பக்தர்கள் மீண்டும் பெரிய வரிசையில் நிற்கவைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை" என்கிறார்
சபரிமலை கோயில் நிர்வாகம் இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த கடந்த 5 நாள்கள் முன்னதாக 1 மணிநேரம் தரிசன நேரத்தை நீடித்தது.
வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் 1 மணி வரை தரிசனம் நடைபெறும். அதன்பிறகு 4 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசனம் நடைபெறும்.
ஆன்லைனில் 90 ஆயிரம் பேர். பாஸ் புக்கிங் மூலம் வருபவர்கள் 35 ஆயிரம் பேர் வருகிறார்கள். நிலக்கல் மற்றும் பம்பையில் இதற்கான சாவடிகள் இயங்கிவருகின்றன. ஆக மொத்தம் ஒருநாளைக்கு 1.5 லட்சம் பேருக்கு மேல் வந்துள்ளனர்.
இந்தக் கூட்டநெரிசலை உணர்ந்த நீதிமன்றம் கூடுதலாக சாமி தரிசனத்திற்கு நேரம் ஒதுக்க முடியுமா எனக் கோயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. அதன்படி சில தினங்கள் முன்னதாக 1 மணிநேரம் கூடுதலாகத் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மாலை 4 மணி என்பதை மாற்றி 3 மணிக்கே நடையை நிர்வாகம் திறக்க உத்தரவிட்டது.
மேலும் பெரியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று 9வது நடையைத் தனியே ஒதுக்கி வழங்கி உள்ளது நிர்வாகம். ஒரு நிமிடத்திற்கு 100 பேர் தரிசனம் செய்கிறார்கள் என்கிறது அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரம் ஒன்று.
இதனால்தான் பக்தர்கள் பலரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை எழுந்துள்ளது. இந்த நிர்வாகத்தில் கேரள அரசுக்குப் பெரிய அளவில் இடம் இல்லை. அது தனி அமைப்பு. ஆனால், கேரள அரசைக் கண்டித்து பாஜகவினர் மறியலில் ஈடுபடுகின்றனர். இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று கோயில் நிர்வாகமே கூறியுள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகப் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்து போலீசார் நிலைமையைக் கட்டுக்கொள் கொண்டுவந்தனர். காங்கிரஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய பத்தனம் திட்டா காவல் கண்காணிப்பாளர் வி.அஜித்குமார், "டிசம்பர் 7 ஆம் தேதி பக்தர்களின் கூட்டம் 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் ஒரு நிமிடத்திற்குள் 70 முதல் 75 பக்தர்கள் படிக்கட்டில் ஏறிச் செல்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். இந்த நிலை நீடித்தால் இதன் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இப்படியே போனால் அந்த சபரிமலையை ஐயப்பனால் கூட காப்பாற்ற முடியாது என்பதே தரிசனம் செய்ய முடியாமல் திரும்பு தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாக ஒலிக்கிறது.
-
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications