"பிளேபாய்" டூ பவர்புல் அரசியல் தலைவர்..மீண்டும் கம்பேக் கொடுக்கும் இம்ரான் கான்.. யார் இவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாக். அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய இவர் யார்.. கடந்த காலம் என்ன என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரமதர் இம்ரான் கான். இவர் இப்போது ஆளும் தரப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மிகப் பெரியளவில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் வழக்கு ஒன்றில் அவர் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இம்ரான் கான்: பாகிஸ்தானில் அதிகரிக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இம்ரான் கானுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 70 வயதான இம்ரான் கான் கடந்த நவம்பர் மாதம் துப்பாக்கிச் சூட்டால் காயம் அடைந்த பிறகும் கூட தொடர்ச்சியாக இப்போது இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அதில் கைதாவதை அவர் தொடர்ந்து தவிர்த்தே வந்தார். அவரைக் கைது செய்ய சில மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்த போது, மாபெரும் போராட்டம் வெடித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கூட்டணி கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்ப அவர் பதவியை இழந்தார். இருப்பினும், தன்னை பதவிநீக்கம் செய்ததில் உலக நாடுகளின் சதி இருப்பதாகச் சொல்லி பெரும் அதிர்வலைகளை அவர் ஏற்படுத்தினார். நாடாளுமன்றத்தைக் கலைக்க அவர் முயன்ற போதிலும், அதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. இதனால் அவர் பதவியை இழந்தார்.
பாக். வரலாறு: பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது முதல் அங்கே இதுவரை எந்தவொரு பிரதமரும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. அந்தப் பட்டியலில் இப்போது இவரும் இணைந்துள்ளார்.
1992 இல் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை பெற்றுத் தந்த இம்ரான் கான் 2018 தேர்தலில் களமிறங்கினார். அனைவராலும் மதிக்கப்படும் ஊழலற்ற, வளமான தேசத்தைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி அவர் தேர்தலை எதிர்கொண்டார். இருப்பினும், அவரால் அதை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
அவர் பிரதமராக இருந்த சமயத்தில் ஒரு கட்டத்தில் அவருக்கும் பாக். ராணுவத்திற்கும் இடைடேயான மோதல் முற்றியது. அதைத் தொடர்ந்தே அவரது கூட்டணி கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வரலாற்றில் சுமார் சரிபாதி காலம் ராணுவ ஆட்சியே நடந்துள்ளது. இருப்பினும், அவர்கள் இந்த முறை நடுநிலையாக அரசியலை விட்டுத் தள்ளி இருப்பதாகவே அறிவித்துள்ளனர்
17 ஆணடுகள்: இருப்பினும், இப்போது இம்ரான் கான் மீண்டும் பிரபலமான தலைவராக மாறி வருகிறார். ஆனால், இது ஏதோ ஒரே நாளில் நடந்தது இல்லை. கடந்த 1996இல் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் 20 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளனர். கிரிக்கெட் கொண்டாடும் பாகிஸ்தானில் அவர் பெரும் நட்சத்திரமாக இருந்த போதிலும், அரசியலில் ஒரு சீட்டில் வெல்லவே அவர் 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
2011 தேர்தல் முதல் இம்ரான் கானுக்கு ஆதரவான அலை வீசத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள படித்த இளைஞர்கள் இம்ரான் கானை ஆதரிக்கத் தொடங்கினர். பாகிஸ்தானை வலிமையான சேதமாக மாற்றுவதே தனது நோக்கம் என்று முழங்கினார் இம்ரான் கான்.
இப்படி பாகிஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இம்ரான் கான் அரசியலில் வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் பார்க்கலாம். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தில் சிவில் இன்ஜினியரின் மகனாக 1952இல் பிறந்தவர் இம்ரான் கான். செல்வம் காரணமாக அவருக்கு அப்போது சிறப்பான படிப்பு கிடைத்தது.
பிளேபாய்: அவர் கல்லூரிக்காக அப்போதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.. அங்குத் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்றார். கிரிகெட்டில் மாஸ் காட்டிய இம்ரான் கான், 1970களில் லண்டனில் பிளேபாயாக உருவெடுத்தார்.
1995இல், அவர் தொழிலதிபர் ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித்தின் மகள் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை மணந்தார். சுமார் 9 ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள் 2004இல் விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்ந்து டிவி செய்தியாளர் ரெஹாம் நய்யார் கான் என்பவருடன் நடந்த இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இப்போது அவர் தனது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் பவுர்புல் தலைவராக இருந்த இம்ரான் கான், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆட்சியை இழக்க நேரிட்டது. இப்போது அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications