ஐபேக் Vs எஸ்டிசி! பிரசாந்த் கிஷோரை வீழ்த்திய ஷர்மா! நாயுடுவின் வெற்றி நாயகன்! யார் இவர்?
ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை இந்திய அரசியலில் கிங் மேக்கராக மாற்றிக் காட்டி இருக்கிறார் ராபின் ஷர்மா. யார் இவர்? இந்த வெற்றிக்கான வியூகங்களை இவர் எப்படி அமைத்தார்.
தனது மாநிலத்தில் மட்டுமல்ல; மோடி 3.0 ஆட்சியில் அசைக்கமுடியாத வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

2019இல் படு தோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சியை மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்திருக்கிறார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது யார் தெரியுமா?
ராபின் ஷர்மா. தேர்தல் வியூக வகுப்பாளர். அதாவது இந்தியா அளவிப் புகழ்பெற்ற பிரசாந்த் கிஷோரின் 'ஐ-பேக்' நிறுவனத்தில் முன்னாள் இயக்குநர். பிரசாந்த் கிஷோரின் கம்பெனியில் தொழில் கற்ற இவர், ஆந்திராவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ-பேக் கம்பெனி என்ற மாபெரும் வெற்றிக் கப்பலைத் தரைதட்ட வைத்திருக்கிறார்.
ஐ-பேக் கம்பெனியில் இருந்து வெளியேறிய இவர், ஷோடைம் கன்சல்டன்சியை நிறுவினார். அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் களத்தில் வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுப்பது இந்த நிறுவனத்தின் பணி.

அப்படித்தான் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ராபின் சர்மாவுக்கு அழைப்பு சென்றுள்ளது. 2019இல் தோல்வியைத் தழுவிய பிறகு அரசியல் ரீதியாக மட்டுமல்ல; சொந்த வாழ்க்கையிலும் பல சரிவுகளைச் சந்தித்தார் நாயுடு.
குறிப்பாக, சிறைக் கம்பிகள் பின்னால் நிற்கும் அளவுக்கு அவரது எதிர்காலம் முடக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இனி ஆந்திர அரசியல் களத்தில் தனக்குப் போட்டியே இல்லை என்று தைரியம் கொள்ளும் அளவுக்கு நாயுடுவின் அரசியல் முடக்கப்பட்டது.
அந்த நேரத்தில்தான் ராபின் ஷர்மாவுக்குக் கட்சியை மீட்டு எடுக்கவும், சந்திரபாபு நாயுடு வாழ்க்கைக்கு மறு உயிர் கொடுப்பதற்கான சவால் நிறைந்த பணி ஒப்படைக்கப்பட்டது.
நாயுடு பக்கம் வெற்றி வியூகங்களை ஆராய்ந்து வந்த சர்மாவுக்கு மாபெரும் சவால் ஒன்று காத்திருந்தது. அதாவது ஆளும் கட்சி சார்பாக ஐ-பேக் நிறுவனம் ஜெகன்மோகன் ரெட்டிக்கான வெற்றி வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தது.
அனுபவம் நிறைந்த ஐ-பேக்கை எதிர்த்து களத்தில் குதித்தது சர்மாவின் ஷோடைம் கன்சல்டன்சி. அந்தப் பணி சவால் நிறைந்தது மட்டுமல்ல; ஆளும் சக்தியை எதிர்த்துக் களமாட வேண்டி உள்ளது என்பதை உணர்ந்தார் சர்மா.
ஆந்திர தேர்தல் அரசியல் களம் மக்கள் பார்வைக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் Vs தெலுங்கு தேசம் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், உண்மையில் அங்கே ஐ-பேக் Vs எஸ்டிசி ஆகிய இரண்டு நிறுவனங்களின் போராக அது கீழ் மட்டத்தில் கண்ணுக்குத் தெரியாமல் செயல்பட்டது.
இந்த வெற்றிக்கனியை எப்படி தெலுங்கு தேசத்தால் பறிக்க முடிந்தது? ஜெகனை எப்படி தோல்வியைத் தழுவ வைக்க முடிந்தது என்பது பற்றி ராபி சர்மா சில விளக்கங்களை அளித்துள்ளார்.

"ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில தேர்தல் களத்தை ஏழை பணக்காரர் என்ற இரு துருவ அரசியலாக மாற்றினார். கிட்டத்தட்ட அதை ஒரு வர்க்கப் போராக மாற்றினார். இது மிகப்பெரிய குறைபாடாக மாறியது.
ஜெகன்மோகன் ரெட்டி ஏழையல்ல. அவருக்கு ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் பிறந்தது முதல் வறுமையை அனுபவிக்கவே இல்லை. அவர் ஒரு பணக்கார முதல்வர்.
தேர்தல் பிரச்சார களத்திற்கு அவர் திரும்பும் வரை அவரை ஆந்திர மக்கள் எளிதாக அணுக முடியவில்லை. அதை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். எங்களின் அனைத்து தேர்தல் தொடர்பான பரப்புகளுக்கு மக்களின் பெயரை வைத்துக் கவனப்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது" என்று கூறியுள்ளார் ராபின் சர்மா.
தொடர்ந்து பேசிய அவர், " நாங்கள் இரண்டு அடுக்கு வார் ரூம்மை அமைத்தோம். அது வழக்கமாக மேலானவர்கள் கீழானவர்கள் என்ற சிந்தனைப் போக்கிலிருந்து விலகிச் சிந்திப்பதாக இருந்தது.
பிறகு மாநிலம் முழுவதும் 'சிசிசி' அதாவது செண்ட்ரல் கமாண்ட் செண்டர் என்ற மையங்களை அமைத்தோம். அந்த மையம் மக்களிடம் உள்ள உண்மையான எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன என்பதைக் கண்டறியும்படி கட்டளையிட்டோம். அதற்கான நூற்றுக்கணக்கானவர்கள் களப்பணி செய்தனர்.
சுருக்கமான சொன்னால் 175 தொகுதிகளிலும் இந்த சிசிசி பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தோம். அதற்காக ஒரு நெட் ஒர்க் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு எனப் பொருத்தமான உத்திகளை உருவாக்கினோம். சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் 175 வேட்பாளர்களுக்கு இந்த சிசிசி மைய பணியாளர்களை அமர்த்தினார்.
அவர்கள் வேட்பாளர்களின் பரப்புரை தொடங்கி செயல்பாடு வரை அனைத்தையும் கண்காணித்தனர். இப்படி தரைமட்ட அளவில் 1400 பேரை பணியில் ஈடுபடுத்தினோம்" என்று ஜெகன்மோகனை வீழ்ந்த செய்யப்பட்ட அனைத்து வியூகங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் சர்மா.
இவரது நிறுவனம் வகுத்த திட்டத்திற்குத் திருப்புமுனையாக அமைந்தது எது தெரியுமா?
மிக முக்கியமாக மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது கடந்த செப்டம்பர் மாதம் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது அவரது மனைவி 'நிஜம் கெளவலி' என்ற பயணத்தைத் தொடங்கினார்.
நாயுடுவின் சொந்த தொகுதியான சந்திரகிரியில் யாத்திரை துவங்கியது. அதன் முதன் கட்டமாக நாயுடு கைது செய்தி வெளியானதும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் மரணமடைந்தனர்.
அந்தத் தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று நிதியுதவி கொடுத்தார் நாயுடு மனைவி புஅவனேஸ்வரி. இந்தச் செய்தி மக்கள் மனதில் ஒரு அனுதாப அலையை உருவாக்கியது. இது முதல் காரணம்.
இரண்டாவது காரணம், நாயுடு விடுதலையாகி வெளியே வந்ததும் யாத்திரை மேற்கொண்டார். இது மற்றொரு திருப்புமுனையானது.
மூன்றாவது இந்தச் சம்பவங்கள் ஜனசேனா மற்றும் பாஜகவை நாயுடுவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. அது மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறியது.
ஆந்திர அரசியலில் சர்மா தெலுங்கு தேசம் கட்சிக்கு வகுத்துக் கொடுத்த சூப்பர் சிக்ஸ் பிரச்சார திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது. மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மாநில மேம்பாடு பற்றிய விழிப்புணர்ச்சியைப் பொதுமக்களிடம் இது ஏற்படுத்தியது.
ஜெகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரிப்பு, பணவீக்கம், பெண்கள் சேமிப்பு இன்றி தவிக்க வேண்டிய நிலை என பல நெருக்கடிகள் நிலவின. அதை இந்த சூப்பர் சிக்ஸ் பிரச்சாரம் கவனம் கொண்டது.
ஆகவே, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 1,500 ரூபாய் வழங்க முன்மொழியப்பட்டது. அதற்கு மகா சக்தி எனப் பெயர் சூட்டப்பட்டது. கூடவே இதன் மூலம் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என ஒரு திட்டம் தீட்டப்பட்டது.
மேலும் சர்மாவின் படை, ஆந்திர மக்கள் ஜெகனுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? அல்லது நிதி உதவி அளிப்பதற்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்தது.
அதில், ஒவ்வொரு பிரஜையும் வளர்ச்சியை அதிகம் விரும்புவதைக் கண்டறிந்தார்கள். மேலும் அரசாங்கம் உதவிகளை மட்டுமே வழங்கக் கூடாது. ஏனென்றால் நிதிப் பற்றாக்குறை வந்தால், அரசு திவாலாகிவிடும் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
ஆகவே, ஜெகன் ஆட்சி திவாலாகிவிடும் என எதிர்மறையாக ஒரு பிரச்சாரத்தைச் சர்மாவின் படை மாநிலம் முழுவதும் மக்களிடம் பரப்பியது. இந்தப் பிரச்சாரத்தை எதிர்மறையாகத் தொடங்கி 'பாபு நி மல்லி ராப்பிடிம்' என்று அதாவது சந்திரபாபுதான் காப்பாற்றுவார் என பாசிடிவ் ஆக முடிக்கப்பட்டது.
அதாவது சுருக்கமாகச் சொன்னால், ஸ்டாலின் தான் வர்றாரு.. என்ற பாணி பிரசாரம்தான் இத.
அடுத்ததாக 'இதேம் கர்ம மன ராஷ்டிரனிகி' திட்டத்தின் வீடு வீடாகப் போல் கணக்கெடுப்பு நடத்தியது சர்மா படை. இதன் வழியே பல்வேறு பிரிவுகளில் 55 லட்சம் பிரச்சினைகளைப் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
இதன்மூலம் ஜெகன் அரசு கடந்த தேர்தலில் கொடுத்த 99% வாக்குகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என முதல்வரின் கவனத்தை ஈர்த்தது. அந்த மனுக்கள் முதல்வரிடம் போய் குவிந்தன. அதனால் ஆட்சி கவிழ வேண்டிய நிலைக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆளானார்.
கடைசியில் ஐபேக் வியூகத்தைத் தோற்கடித்து சர்மாவின் வியூகம் வென்றது. ஆனால் இந்த வெற்றி தனது எஸ்டிசிக்கும் ஐபேக் நிறுவனத்திற்குமான போட்டி இல்லை. இது சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் கொடுத்த வெற்றி. நான் இப்போது ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியனாக நட்புடன் இருக்கிறேன் என்கிறார் ராபின் சர்மா.












Click it and Unblock the Notifications