"மிஸ்ஸாகும் கவாச்.." மேற்கு வங்கத்தில் கொடூர ரயில் விபத்து.. இதுவே காரணம்! பதற வைக்கும் தகவல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த ரயில் விபத்து கவாச் பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதென்ன கவாச் பாதுகாப்பு அமைப்பு.. இது எப்படி செயல்படுகிறது.. மேற்கு வங்க ரயில் விபத்தை இந்த கவாச் பாதுகாப்பு அமைப்பு தடுக்க முடியாமல் போக என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த சில காலமாகவே மோசமான ரயில் விபத்துகள் தொடர்கதையாகி இருக்கிறது. கடந்தாண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்தனர்.

அதன் பிறகும் கூட நாட்டில் இதுபோன்ற ரயில் விபத்துகள் தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு மோசமான விபத்து தான் இன்று மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
ரயில் விபத்து: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நோக்கிச் சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.. மேலும், இந்த மோசமான விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நமது நாட்டில் இதுபோன்ற ரயில் விபத்துகள் தொடர் கதையாகியுள்ள நிலையில், இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மோசமான ரயில் விபத்துகள் நடக்கும் போதெல்லாம் கவாச் குறித்த பேச்சு எழும். அதாவது கவாச் என்பது தண்டவாளங்களில் இரண்டு ரயில்கள் மோதுவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கவாச் அமைப்பு என்றால் என்ன.. மேற்கு வங்கத்தில் இன்று அரங்கேறிய இந்த விபத்தை கவாச் அமைப்பால் ஏன் தடுக்க முடியவில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம். முதலில் கவாச் என்றால் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
விபத்து: ரயில் விபத்துகளைத் தடுக்கும் கவாச் அமைப்பு ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும்.. இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RSCO) இதை உருவாக்கியது. ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினால் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை அம்சமாகும்.
தண்டவாளத்தில் உள்ள ஆபத்துகளை அடையாளம் காண கவாச் சிஸ்டம் டிரைவர்களுக்கு உதவுகிறது.. மேலும் இது அடர்ந்த மூடுபனி உள்ளிட்ட தெளிவு இல்லாத சூழல்களிலும் ரயில்களை இயக்கவும் உதவுகிறது. இந்த அமைப்பு முக்கியமாக RFID அதாவது ரேடியோ அதிர்வெண் ஐடென்டிபிக்கேஷன் மூலம் இயங்குகிறது. இந்த RFID ரயில் பாதைகளிலும் ரயில் நிலையங்களிலும் வைக்கப்படும். அதை வைத்தே ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வருகிறதா என்பது கண்டறியப்படுகிறது.
கவாச் எதற்கு: குறிப்பிட்ட வழித்தடத்தில் ஒரே டிராக்கில் 5 கிமீ தொலைவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்தால் அவை அனைத்தும் நிறுத்தப்படும்.. அருகில் உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பாதுகாப்பாகச் செல்வதை இது உறுதி செய்யும்.. மேலும் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் சிக்னலை தெளிவாகப் பார்க்கவும் இது ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும்.
என்ன காரணம்: சரி விஷயத்திற்கு வருவோம்.. ஏன் மேற்கு வங்க ரயில் விபத்தை இந்த கவாச் அமைப்பு தடுக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் வரலாம். விபத்து நடந்த கவுஹாத்தி ரூட்டில் இன்னும் கவாச் அமைப்பு செயல்படுத்தப்படவில்லை. அந்த ரூட்டில் கவாச் இல்லை என்பதாலேயே விபத்து நடந்துள்ளது. கவாச் அமைப்பு மட்டும் இருந்திருந்தால் இந்த விபத்தை நடந்திருக்காது.
இந்தியாவில் மொத்தம் சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகள் உள்ளன. அதில் சுமார் 1,500 கிமீ ரயில் பாதைகளில் மட்டுமே கவாச் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக சுமார் 10,000 கிமீ தொலைவிற்கு இந்த கவாச் அமைப்பை நிறுவ இந்திய ரயில்வே டெண்டர்களை வழங்கியுள்ளது. விபத்து நடந்த கவுஹாத்தி ரூட்டில் கவாச் அமைப்பு இல்லாமல் போனதே விபத்திற்கான காரணமாகும்.
ரயில் விபத்து: இன்று காலை டார்ஜிலிங் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதால், காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications