ஓங்கி அடிக்கும் கெஜ்ரிவால்.. வெலவெலத்த பாஜக.. மலங்க விழிக்கும் காங்கிரஸ்.. உத்தரகாண்ட்டில் பரபரப்பு
அரவிந்த கெஜ்ரிவால் தந்த வாக்குறுதிகள் உத்தரகாண்ட் மக்களை ஈர்த்து வருகின்றன
டேராடூன்: பஞ்சாப் மட்டுமல்லாமல், உத்தரகாண்ட் தேர்தல் களத்திலும் பாஜகவை மிரள வைத்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. இதனால் அம்மாநிலத்தின் தேர்தல் களமே தகித்து போய் காணப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தை இந்துக்களின் சர்வதேச ஆன்மீக தலைநகராக மாற்றுவோம், பெண்களின் தேவைக்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
உத்தரகாண்டில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது... இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்
அதேசமயம், இந்த கட்சிகளுக்குள் கோஷ்டிப்பூசல்களும், கட்சித்தாவல்களும் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கின்றன.. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது... 2017ல் பாஜக இங்கு 57 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது.. ஆனால், இப்போது அந்த கட்சி மீது மக்களுக்கு நிறைய அதிருப்திகள் உள்ளன.. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட மாநிலத்தின் பிரதான பிரச்னைகளை பாஜக சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஹரித்வார்
எல்லாவற்றிற்கும் மேலாக ஹரித்வாரில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், சுமார் 70 லட்சம் பேர் கலந்துகொள்ள அனுமதித்ததையும், அங்கு வந்தவர்களுக்கு நடத்திய கொரோனா டெஸ்ட்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையும் அம்மாநில மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றே தெரிகிறது.. இதற்கு நடுவில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடி, இந்த ஒரு வருடத்தில் மட்டும் 2 முதல்வர்களை அம்மாநிலம் பெற்றுள்ளது என்றால் அதற்கு காரணம் பாஜக மட்டுமே.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, உட்கட்சி பூசல் மட்டுமே பிரதான பிரச்சனையாக இருந்து வருகிறது.. இவர்களின் சண்டையை தீர்க்க மேலிடம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும், ஓரளவுதான் பலன் கிடைத்துள்ளது.. மேலும், மாநில காங்கிரஸின் மகளிரணித் தலைவர் உட்பட சில முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்துவிட்டது, காங்கிரசுக்கு சறுக்கலைதான் ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான்,
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரூ.500-க்கும் குறைவாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்பது உட்பட ராகுல் தந்த வாக்குறுதிகள் அம்மக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.

பாஜக
காங்கிரசும் பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு வியூகங்களை கையில் எடுத்து வரும் நிலையில் நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என்று முந்திக் கொண்டு மேலே வருகிறது ஆம் ஆத்மி கட்சி.. பஞ்சாப்பில் எப்படி காங்கிரஸை ஓவர்டேக் செய்து பாஜகவுக்கு டஃப் தருகிறதோ, அதுபோலவே, உத்தரகாண்ட்டிலும் வாக்குகளை அள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பிளான் செய்து வருகிறார்.. இதற்காகவே சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு அந்த மக்களை கவர்ந்து வருகிறார்.

கெஜ்ரிவால்
நேற்றுகூட, அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை இந்துக்களுக்கான சர்வதேச ஆன்மீக தலைநகராக மாற்றுவோம்... இது சுற்றுலாவை விரிவாக மேம்படுத்தும். இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறோம்...இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல். மிகப்பெரிய மாற்றம் நடக்க போகிறது.. உத்தரகாண்டில் முதல் முறையாக நேர்மையான அரசு அமைக்கலாம்... அதனால் ஊழலை ஒழிக்க முடியும்.

நிபுணர்கள் கருத்து
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இங்கு பெண்களின் தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்... இந்த தொகை பெண்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்" என்று கூறியுள்ளார். பாஜக பாணியிலேயே ஆன்மீகத்தை கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. எனினும், இந்த உத்தரகாண்ட் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான், மிகக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்... பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications