சி.பி.ஐ. விசாரணை தேவை.. உடல்களை அடக்கம் செய்ய முடியாது: 'என்கவுண்ட்டர்' தீவிரவாதிகளின் உறவினர்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 5 தீவிரவாதிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பலியானோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வரை 5 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இத்தீவிரவாதிகள் 5 பேரும் நேற்று வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர்.

அப்போது போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட அனைவரும் முயற்சித்ததாகவும் இந்த மோதலில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெலுங்கானா போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இந்த என்கவுண்ட்டர் தொடர்பான புகைப்படங்கள் வெளியான போது, அனைவருமே போலீஸ் வேனில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; அதுவும் ஒரு சிலரது கை விலங்குகள் போலீஸ் வேனிலேயே கட்டப்பட்டும் உள்ளன; எவரும் தப்பி ஓட முயற்சித்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் இதுவும் திட்டமிட்ட படுகொலையே என்ற கண்டனக் குரல்கள் வெடித்தன. இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட விகருதீன், சையத் அம்ஜத், ஹனீப், ஜாஹிர் மற்றும் இர்பான் அலி ஆகியோரது உறவினர்கள் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விகருதீன் தந்தை முகமது அகமது, என்னுடைய மகனை படுகொலை செய்துவிட்டனர்.. இந்த கொடூரமான கொலைக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்... என் மகன் மீதான வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது.. அவன் நிச்சயம் விடுதலையாகி இருப்பான்.. இதை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே போலீசார் கொலை செய்துவிட்டனர் என்று கண்ணீர்மல்க கூறினார்.
இதேபோல் பலியான மற்றவர்களின் உறவினர்களும், இந்த சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.. அதுவரை நாங்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications