குடும்பத்தின் மூத்தப் பெண்களும் ‘கர்தா’ தான்... டெல்லி ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: குடும்பத்தில் உள்ள மூத்தப் பெண்கள், அந்தக் குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்புகளை (கர்தா) வகிக்க முடியும், குடும்பத் தலைவராக இருக்க முடியும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இந்தியக் குடும்பங்களில் வழக்கமாக ஆண்களே இந்த வேலையை இத்தனை காலமாக தங்களது கையில் வைத்து வருகின்றனர். பெண்களிடம் நிர்வாகத்தை பெரும்பாலான ஆண்கள் தருவதில்லை. இந்த நிலையில் இந்து மதத்தின் பாரம்பரியங்கள், நடைமுறைகள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி, பெண்களும் குடும்பத் தலைவியாக, குடும்ப நிர்வாகியாக செயல்பட முடியும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து நீதிபதி நஜ்மி வசிரி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘இந்து கூட்டுக் குடும்பங்களில் மூத்த ஆண்மகன் குடும்பத் தலைவராவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அதேபோல மூத்த பெண்களும் குடும்பத் தலைவராக முடியும். குடும்பத்தில் மூத்த பெண், குடும்ப நிர்வாகியாவதை எந்த சட்டமும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்.
வட இந்திய மாநிலகளில் கர்தா எனப்படும் மூத்த உறுப்பினருக்குத்தான் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும், தீர்மானிக்கும் உரிமை உள்ளது. சொத்து வாங்குவது, விற்பது உள்பட அனைத்து முக்கிய முடிவுகளையும் இவர்கள்தான் எடுக்கிறார்கள். இதில் ஆணாதிக்கமே இதுவரை நிலவி வருகிறது. அதை தற்போது டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு தகர்த்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் மூத்த மகள் போட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. தனது தந்தை மறைந்த பின்னர் அவரது 3 தம்பிகள் சொத்துக்களை நிர்வகித்து வந்ததாகவும், தற்போது அவர்களும் மறைந்த பின்னர் தான் பொறுப்புக்கு வர முயன்றபோது தனது சித்தப்பா மகன் அதைத் தடுத்து விட்டதாகவும் கூறி அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தர்மசாஸ்திரம் உள்ளிட்ட இந்து நூல்களில் வீட்டில் மூத்த பெண்ணுக்கும், ஆண்களைப் போலவே குடும்பத் தலைவராகும், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உண்டு' என்று கூறியிருப்பதை தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications