இளைஞர்கள் நலனே முதன்மையானது.. விளையாட்டு போட்டிக்கான லோகோவை வெளியிட்டு யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் 'கேலோ இந்தியா' 2022ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிக்கான லோகோ, ஜெர்சி உள்ளிட்டவற்றை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அகியோர் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த கேலோ இந்தியா விளையாட்டுகள் தள்ளிவைக்கப்பட்டன. எனவே இதனையடுத்து இந்த ஆண்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்படுகிறது. இதற்கான லோகோ, ஜெர்ஸி உள்ளிட்டவற்றை உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில் சிறப்புரையாற்றிய அனுராக் சிங் தாக்கூர், "பிரதமர் மோடி கற்பனை செய்த கேலோ இந்தியா இயக்கம் இன்று மிகப்பெரிய புரட்சியை விளையாட்டு துறையில் ஏற்படுத்தியுள்ளது. இந்த புரட்சி தற்போது உத்தரப் பிரதேசத்தை அடைந்திருக்கிறது.

விளையாட்டு என்பது வாழ்க்கையோடு ஒன்றர கலந்த விஷயமாகும். ஆனால் இளைஞர்கள் பலர் இந்த விளையாட்டின் பக்கம் வருவதை தவிர்க்கின்றனர். வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள, வாழ்க்கையின் கடினமான பக்கங்களை அறிந்துகொள்ள விளையாட்டு என்பது ஒரு சிறந்த வழியாகும். விளையாட்டில் சிறந்து விளங்குபவர்கள் ஒழுக்கத்திலும் சிறப்பான மனிதர்களாக இருப்பார்கள். அதேபோல தேசப்பற்றையும் விளையாட்டு நமக்கு உருவாக்கும். அந்த வகையில் கேலோ இந்தியா விளையாட்டு உத்தரப் பிரதேசத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், "இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரியம் எல்லோருக்கும் தெரியும். நம்நாட்டின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கம் தேசப்பற்றுதான். விளையாட்டு போட்டிகள் இந்த தேசபக்தியை வளர்க்கிறது. மறுபுறம் போதைக்கு எதிராகவும் செயல்படுகிறது. போதை பழக்கத்தின்போது மூளையிலிருந்து ஒருவித ரசாயனம் சுரக்கும். இது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் விளையாட்டின்போது மூளையிலிருந்து சுரக்கும் ரசாயனம், போதையைவிட அதிக மகிழ்ச்சியை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே விளையாட்டு என்பது போதைக்கு எதிரான வலுவான மாற்று பாதையாகும்.

எனவே இந்த விளையாட்டு போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம். 12 நாட்கள் இந்த விளையாட்டு போட்டி நடக்கிறது. டெல்லியின் டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடுதல் போட்டியும், வாரணாசி, நொய்டா மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் கபடி போட்டியையும் நடத்துகிறோம். மே மாதம் 25ம் தேதி தொடங்கும் இந்த விளையாட்டு போட்டியானது ஜூன் மாதம் 03ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதுமிருந்து சுமார் 200 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 4000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications