டிரம்புக்கு நெருக்கடி.. சவூதி அரேபியாவுக்கு ஈரான் கொடுத்த பெரிய ஆஃபர்.. இணையும் எதிரெதிர் துருவங்கள்
தெஹ்ரான்: அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான் தங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார். இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் திடீரென்று ஈரான் சென்று அந்த நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த வேளையில் சவூதி அரேபியாவுக்கு ஈரான் முக்கிய ஆஃபரை கொடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பில் தீவிரம் காட்டுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு கடிதம் எழுதினார்.

ஈரான் முதலில் மறுத்தது. அதன்பிறகு கடந்த 12ம் தேதி ஈரான் - அமெரிக்கா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இருநாடுகளும் கூறின. இருப்பினும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதையடுத்து ஈரான் - அமெரிக்கா இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவோம். ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். இதனால் ரோமில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தை முக்கிய கவனம் பெற்றுள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சவூதி அரேபியாவின் இளவரசரும், அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சருமான காலித் பின் சல்மான், ஈரான் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியை தெஹ்ரானில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு என்பது நேற்று முன்தினம் நடந்துள்ளது. IMEX 2024 என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு - பயிற்சி என்பது ஈரானில் நடந்தது.
இந்த பயிற்சியில் ஈரான், ரஷ்யா மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இதில் சவூதி அரேபியா, இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். அதன்படி சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் பங்கேற்று இருந்தார். ஈரானுக்கு அமெரிக்காவின் மிரட்டல் தொடர்ந்து இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஏனென்றால் பொதுவாக சவூதி அரேபியா எந்த நாடுகளுடன் மோதலை விரும்பாது. பிரச்சனைகளுக்கு மோதல் என்பது தீர்வு அல்ல. பேசி தீர்க்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான சமயங்களில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் என்று எடுத்து கொண்டாலும் பல சந்தர்ப்பங்களில் சவூதி அரேபியா தொடர்ந்து மவுனமாக தான் இருந்துள்ளது. இன்னும் சொல்லப்பபோனால் ஈரானைவிட அமெரிக்காவிடம் தான் சவூதி அரேபியா தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது. ஏனென்றால் ஈரான், சவூதி அரேபியா ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யார் பெரியவர்கள்? என்ற போட்டி உள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர்களில் சவூதி அரேபியாவும், ஈரானும் பல சந்தர்ப்பங்களில் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இருப்பினும் தற்போது ஈரானுடன் சவூதி அரேபியா நெருங்கி செல்வதாக கூறப்படுகிறது. ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா உதவி கேட்டது. அப்போது சவூதி அரேபியா உதவ மறுத்தது. அதன்பிறகு ஈரான் மீது வான்வெளி தாக்குதலை அமெரிக்கா நடத்தலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் சவூதி அரேபியாவின் வான்வெளி பரப்பில் பறக்க தடை விதிக்கப்பட்டது. இது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் தற்போது சவூதி அரேபியாவுக்கு, ஈரான் முக்கிய ஆஃபரை வழங்கி உள்ளது. அதாவது சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் உடனான சந்திப்பின்போது ஈரான் ஆயுதப்படையின் தலைமை தளதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி, சவூதி அரேபியாவுடன் ராணுவ உறவுகளை விரிவுப்படுத்த விரும்புவதாக கூறினார். அதுமட்டுமின்றி, ஈரானின் கொள்கை என்பது அண்டைநாடுகளுடனான உறவை வளர்ப்பதை மையமாக கொண்டது.
இதனால் இருநாடுகளுக்கு இடையேயான ஆயுத படைகளின் உறவுகளை வளர்ப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்து வருவது போல் இனியொரு இஸ்லாமிய நாட்டில் மாற்று நாட்டை நுழைய விடக்கூடாது. இதற்கு நாம் இணைவது அவசியம் என்று கூறியுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கு ‛பெய்ஜிங் ஒப்பந்தம் கடந்த 2023 மார்ச்சில் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக ராணுவ உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சவூதி அரேபியாவும் நெகட்டிவ் பதிலை கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.
சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான், ‛‛உங்கள் விருந்தோம்பல் என்பது நமக்குள் இருக்கும் நல்ல உறவை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான உறவுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இறைவன் விரும்பும்பட்சத்தில் இந்த நல்ல உறவுகளின் விளைவு என்பது பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை நோக்கி இருக்கும். இருநாடுகள் மட்டுமின்றி இந்த பிராந்தியத்துக்கும் நல்ல பலனை தரும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஈரான் - சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வரும் ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படலாம்.
இது நடக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியும். தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானை விட அமெரிக்கா தான் சவூதி அரேபியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. ஆனால் காசா மீதான இஸ்ரேல் போர் நடவடிக்கையில் பாலஸ்தீனம் பக்கம் சவூதி அரேபியா நிற்கிறது. அமெரிக்காவோ இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகிறது. இது சவூதி அரேபியாவை கோபப்படுத்தி உள்ளது. இருப்பினும் கூட அந்த நாடு அதிருப்தியுடனே அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது.
இப்படியான சூழலில் இஸ்லாமிய நாடுகளை குறிவைக்கும் அமெரிக்காவின் செயல் தொடருமேயானால் சவூதி அரேபியா தனது நிலைப்பாட்டை மாற்றி ஈரானுடன் கைகோர்க்கலாம். இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுதந்திரமாக செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி மொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஈரானும், சவூதிஅரேபியாவும் பிற இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பில் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதனால் ஈரான் - சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை என்பதை அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கின்றனர் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications