மும்பை: அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்த ஆஸ்திரேலியர் கைது

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டவர் கொண்டு வரும் செயற்கைக் கோள் தொலைபேசிகளுக்கு மட்டுமே, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மலேசிய நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்டொனல்ட் புரூஸ் ஆண்ட்ரூ (54) என்ற நபர் கோவா செல்வதற்காக தனது குடும்பத்தாருடன் மும்பை விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, அவரிடம் இரிடியம் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தொலைபேசி ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செயற்கைக்கோள் தொலைபேசியை பறிமுதல் செய்து மெக்டொனால்டை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது தனக்குத் தெரியாது என்றும், தவறான நோக்கத்துக்காக தான் அந்த தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை என்றும் போலீசாரிடம் விளக்கமளித்தார் மெக்டோனால்ட்.
அதையடுத்து, மெக்டொனால்ட் ரூ 15,000 மதிப்பிலான சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இத்தகவலை மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மெக்டோனால்ட் கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications