திருந்தாத அஜர்பைஜான்.. பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கும் இஸ்லாமிய நாடு! பின்னணி
பாகு: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்த அஜர்பைஜான், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அஜர்பைஜானுக்கு சென்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலரை தூக்கி கொடுப்பதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. கடந்த 7 ம் தேதி அதிகாலையில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதன்பிறகு 10ம் தேதி அதிகாலையில் ராணுவ தளம், விமானதளங்கள் என்று 11 இடங்கள் மீது நம் நாடு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் நம் நாட்டிடம் மண்டியிட்டது. மோதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு மோதலை நிறுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலில் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
துருக்கி ட்ரோன், ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கியதோடு, இந்தியாவை கண்டித்தது. அதேபோல் அஜர்பைஜானும் இந்தியாவை கண்டித்தது. இதனால் துருக்கி, அஜர்பைஜானை நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இருநாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை மக்கள் நிறுத்தி உள்ளனர். அதேபோல் அந்த நாடுகளுடனான வர்த்தகத்தையும் நம் நாட்டு மக்கள் புறக்கணித்துள்ளனர்.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவுடன் நடந்த மோதல் பற்றி விளக்கம் அளித்தார். நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அஜர்பைஜானுக்கு சென்றார். அஜர்பைஜானின் லாச்சின் நகரில் துருக்கி, அஜர்பைஜான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் 3 நாடுகள் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு, துருக்கி அதிகமாக உதவி செய்து வருகிறது. இதையடுத்து அஜர்பைஜானும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது. அதன்படி பாகிஸ்தானில் வர்த்தகம், முதலீடு என்ற வகையில் 2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்வதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியே கூறினார்.
இதுதொடர்பாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியே கூறுகையில், ‛‛பொருளாதாரம்,எரிசக்தி, போக்குவரத்து, பாதுகாப்பு, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கூட்டாக சேர்ந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் அஜர்பைஜான் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தானில் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம்.
மேலும் பாகிஸ்தானிடம் பெரும் ஆற்றல் இருப்பதாக நினைக்கிறோம். பாதுகாப்பு துறையில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளவும், ஆயுத பயிற்சி செய்யவும் விரும்புகிறோம். இது இருநாடுகளின் ஆயுதப்படைகளின் திறனை அதிகரிக்கும்'' என்றார். இதன்மூலம் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானில் 2 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications