குட்டையை குழப்பிய சீனா.. பாகிஸ்தானுடன் கரம் கோர்த்த வங்க தேசம்! இந்தியாவுக்கு சிக்கல்
டாக்கா: வங்கதேசம் சமீப காலமாக பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இரு நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் சந்தித்திருக்கின்றனர். இந்த வரலாற்று சந்திப்புக்கு சீனா காரணமாக இருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவுக்கு எதிரானதாக திரும்பியிருக்கிறது.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் விடுதலை பெற்றதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும், வங்க தேசமும் கைகோர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அம்னா பாலோச் டாக்கா சென்றிருந்தார். அங்கு வைத்து வங்கதேசத்தின் வெளியுறவு செயலாளர் மோ ஜஷீம் உத்தீன்-ஐ சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது. பாகிஸ்தானுக்கு இந்த உறவு புதுப்பிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம் இத்தனை ஆண்டுகளாக வங்கதேசம் பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தது. காரணம் 1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக விடுதலை பெற்றது.
எப்போதுமே ஒரு நாட்டிலிருந்து சிறு பகுதி புதிய நாடாக விடுதலை பெற்றால், இரு நாடுகளும் எலியும் பூனையுமாகதான் இருக்கும். அந்த வகையில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பாகிஸ்தானுடன் மோதல் போக்கைதான் பின்பற்றி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு வங்க தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு முகமது யூனூஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. யூனூஸ் வந்த பின்னர் சீனுாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார்.
இந்த நெருக்கம்தான் தற்போது பாகிஸ்தானுடனான உறவாக மலர்ந்திருக்கிறது. இன்று நடந்திருக்கும் இரு நாட்டின் வெளியுறவு செயலளார்கள் சந்திப்புக்கு முன்னதாக ஏற்கெனவே பல தளங்களில் இரு நாடுகளும் தங்கள் உறவை மேம்படுத்தி வந்திருக்கின்றன. உதாரணமாக மாணவர்கள் நலனின் பாகிஸ்தான் அதிக ஆர்வம் காட்டியது. அதாவது வங்கதேச மாணவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவியை வழங்கியது. இது பாகிஸ்தான் பற்றிய மதிப்பை வங்கதேச மக்களிடையே மாற்றியது.
சீனா நீண்ட காலமாக பட்டுப்பாதையை கட்டமைக்க முயன்று வருகிறது. பட்டுப்பாதை என்பது, சீன தயாரிப்புகளை ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்ல அமைக்கப்படும் பாதையாகும். இந்த பாதையை அமைக்க வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு முக்கியம். எனவே இரு நாடுகளையும் சீனா ஒன்று சேர்த்திருக்கிறது.
இது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications