"டிரம்பின் மறுஉருவம்".. கனடா பிரதமர் ரேஸில் இந்திய வம்சாவளி ரூபி.. இந்திரா காந்தியுடன் தொடர்பு
ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாணியில், ‛‛நான் பிரதமரானால் கனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களை நாடு கடத்துவேன்'' என்று அந்த நாட்டின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கி உள்ள இந்திய வம்சவாளி ரூபி தல்லா தெரிவித்துள்ளார். இதனால் கனடாவின் லேடி டிரம்ப் என்று பலரும் ரூபி தல்லாவை அழைக்க தொடங்கி உள்ள நிலையில் அவருக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் முக்கிய தொடர்பு உள்ளது? என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த சுவாரசிய தகவல் பற்றிய விபரம் வருமாறு:
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்துள்ளார். மார்ச் மாதம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் தான் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பில் ரூபி தல்லா பிரதமர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

கனடாவின் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் கனடா அதிபராக தேர்வு செய்தால் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்துவேன் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரூபி தல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛கனடாவின் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்) அதிகமானவர்கள் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இது ஏற்கவே முடியாது. புலம்பெயர் பெற்றோரின் ஒரு மகளாக நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இது சட்டவிரோதமானது. உங்களின் பிரதமராக நான் உங்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது'' என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது நான் மட்டும் அமெரிக்க அதிபராக வந்தால் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவேன் என்று அறிவித்து அமோக வெற்றி பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். கடந்த 20ம் தேதி அதிபரானதும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் பணியை தொடங்கி உள்ளார். அவரது பாணியில் தான் ரூபி தல்லாவும் கனடாவில் அறிவித்துள்ளார். இதனால் அவர் கனடாவின் லேடி டிரம்ப் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் ரூபி தல்லா யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் தேட தொடங்கி உள்ளனர். அதன்படி பார்த்தால்
ரூபி தல்லா ஒரு இந்திய வம்சாவளி ஆவார். இவரது பெற்றோர் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். ரூபி தல்லா கனடாவின் மனிடோபாவின் வின்னிபெக்கில் பிறந்தார். அவர் சிரோபிராக்டராக (Chiropractor) பணியாற்றியதோடு, நடிகையாகவும் இருந்தார். 1993ல் இந்தியா - கனடா மிஸ் அழகி போட்டியில் 2ம் இடம் பிடித்தார். அதன்பிறகு தான் அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.
லிபரல் கட்சியில் சேர்ந்த அவர் கனடாவின் பிரம்ப்டன்-ஸ்பிரிங்டாலி பகுதியின் எம்பியாக இருந்தார். 2004 முதல் 2011 வரை எம்பியாக அவர் நீடித்தார். மேலும் ரூபி தல்லாவுக்கும், மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உள்ளது. அதாவது இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு ‛ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற பெயரில் பஞ்சாப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டார். 1984 ஜுன் 1ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை இந்திய ராணுவம் பஞ்சாப்பில் இருந்து கொண்டு தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை அழிக்க திட்டமிட்டது. இந்த திட்டத்தின் பெயர் தான் ‛ப்ளூ ஸ்டார்'. அப்போது பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலே உள்பட 554 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பாராட்டு தெரிவித்து ரூபி தல்லா தனது 10 வயதில் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை இந்திரா காந்தி தனது பிரஸ்மீட்டில் காட்டி பேசியிருந்தார். இப்படியான சூழலில் தான் ரூபி தல்லா கனடாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு அதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளார். தனக்கு ஆதரவு அளிக்கும்படி அவர் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications