தாறுமாறாக வரியை போட்ட டிரம்ப்.. கண்கள் சிவந்த ஜி ஜின்பிங்! திடீர் பதிலடி.. பரபரக்கும் உலக அரசியல்
பெய்ஜிங்: அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை அறிவித்து வருகின்றன. கடைசியாக உலகின் மற்ற நாடுகள் மீதான வரியை நிறுத்தி வைத்த டிரம்ப், சீனா மீதான வரிகளை மட்டும் 145%ஆக உயர்த்தினார். இதற்கிடையே இந்த வரி விவகாரம் குறித்து முதல்முறையாக சீன அதிபர் ஜின்பிங் மனம் திறந்துள்ளார்.
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக பதற்றம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி வரிகளை அறிவித்து வருவதால் அது சர்வதேச வர்த்தக போரை உருவாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. டிரம்ப் கடந்த வாரம் செய்தியாள்களிடம் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்கா சீனா
இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதேநேரம் மற்ற நாடுகளும் மீதான வரியை நிறுத்தினாலும் கூட சீனா மீதான வரிகளை டிரம்ப் அதிகரித்தே உத்தரவிட்டார். உலகின் இரு பெரும் பொருளாதாரங்கள் இதுபோல மாறி மாறி வரிகளை விதித்து வருவது வர்த்தக போர் ஆபத்தை அதிகரித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்
இதற்கிடையே டிரம்பின் வரி தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டிரம்ப் உலக நாடுகளை கொடுமைப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜி ஜின்பிங், அதை ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை சந்தித்த நிலையில், அப்போது தான் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வலுவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை ஜின் பிங் வலியுறுத்தினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மேலும் கூறுகையில், "சீனாவும் ஐரோப்பாவும் தங்கள் சர்வதேசப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்... மேலும் உலக நாடுகளை கொடுமைப்படுத்தி வரும் நடைமுறைகளை கூட்டாக எதிர்க்க வேண்டும். இரு தரப்பின் ஒத்துழைப்பு என்பது இரு நாடுகளின் சொந்த நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பாதுகாக்க உதவும்" என்றார்
ஒத்துழைப்பு தேவை
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் கூறுகையில், "ஐரோப்பா சீனாவுடன் கணிசமான வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தாலும், அது இரு தரப்பு உறவை நிச்சயம் பாதிக்காது. வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்ய நாம் பாடுபட வேண்டும். சீனா- ஸ்பெயின், சீனா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவை சர்வதேச வர்த்தக பதற்றம் பாதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது" என்றார்.
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 145% வரிகளை விதிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்திருந்தது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தை சரிந்த நிலையில், தங்கம் கூட வரலாறு காணாத அளவுக்கு உயர தொடங்கியது. இந்தச் சூழலில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
பதிலடி கொடுத்த சீனா
அமெரிக்காவின் வரிகள் ஒரு பக்கம் இருக்க.. சீனாவும் பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது வரிகளை அறிவித்துள்ளன. அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீனா அறிவித்திருந்த நிலையில், அந்த வரியை மேலும் 125%ஆக உயர்த்தி சீனா உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications